
தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் முன்னதாக வெளியான நிலையில் ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை பழங்குடியின மக்களின் வாழ்வியலை பின்னனியாகக் கொண்டு ஆக்ஷன், எமோஷன் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிந்தது.
ட்ரைலரின் இறுதியில் விஜயகாந்த் முகம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரின் பிரபல பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்...’ பாடல் பின்னணியில் ஒலித்திருந்தது. இதனால் இப்படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இப்படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சண்முக பாண்டியனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவரிடம் படம் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு வரும் விமர்சனங்கள் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தோ. அதற்கு பதில் அளித்த அவர், “நான் காலேஜ் படிக்கும் போது நடிக்க வந்தேன். அப்போது தொடங்கி இப்போது வரை விமர்சனங்கள் தான் அதிகம் வருகிறது. நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க மாட்டேன். ஒரு போஸ்ட் போட்டால், போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவேன். போஸ்டுக்கு வரும் கமெண்ட்ஸூகளை பார்க்க மாட்டேன். நல்லதோ கெட்டதோ நம்மளை ஒரு ஆளாக வைத்து பேசுகிறார்களே... அதுவே போதும் என கடந்து விடுவேன்” என்றார்.