இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தியன் 3 பட பணிகளிலும் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக இந்தப் படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக மதுரை எம்.பி. மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் சூர்யா நடிப்பதாகவும் பின்பு ரன்வீர் சிங் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ஷங்கர், வேள்பாரி நாவலில் இருக்கும் காட்சிகள் பல படங்களில் படமாக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைவரது கவனத்துக்கும். சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற தமிழ் நாவலான வீர யுக நாயகன் வேள்பாரியின் காப்புரிமையை வைத்திருப்பவன் என்ற முறையில், சொல்கிறேன். நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதி இல்லாமல் பல படங்களில் பயன்படுத்தப்படுவது என்னை உலுக்குகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ஒன்றில் நாவலின் ஒரு முக்கிய காட்சி வருவதை கண்டு வேதனை அடைந்தேன். திரைப்படங்கள், வெப்தொடர்கள் என அனைத்திலும் இந்த நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். படைப்பாளியின் உரிமைக்கு மதிப்பளியுங்கள். அதை மீறி காட்சிகளை பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” எனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷங்கர் குறிப்பிட்ட படம் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேவரா’ படத்தின் ட்ரைலரைத் தான் சொல்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுடில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.