
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படக்குழு தியேட்டர் விசிட் அடித்து வருகிறது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் தியேட்டர் விசிட் அடித்த படக்குழு தற்போது ஹைதராபாத்திலும் தொடர்ந்து வருகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டிராகன் ஒரு அழகான படம். அருமையான ரைட்டிங். ஹேட்ஸ் ஆஃப் டூ அஷ்வத் மாரிமுத்து. எல்லா கேரக்டர்ஸும் அழகாகவும் முழுமையாகவும் இருந்தது. பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு முறை தான் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர் எனவும் அதே சமயம் ஒரு வலிமையான, ஆத்மார்த்தமான நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

மிஷ்கின், அனுபமா, ஜார்ஜ் மரியம் ஆகியோர் மனதில் நிற்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர். அனைத்து ஜென் சி மற்றும் மில்லினியல் கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கடித்து விட்டது. ஏமாற்றுக்காரர்கள் அதிகரித்து வரும் இந்த உலகில் படத்தில் சொல்லும் மெசேஜ் மிகவும் தேவையான ஒன்று. ஏ.ஜி.எஸ். புரொடக்ஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.