நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் ‘வேள்பாரி வெற்றிப் பெருவிழா’ எனும் தலைப்பில் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், உதயசந்திரன் ஐஏஎஸ், பத்திரிக்கையாளர் கோபிநாத், இயக்குநர் சங்கர், நடிகை ரோகினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சங்கர் பேசுகையில், “கரோனா நேரத்தில் தான் வேள்பாரி நாவலை படித்தேன். பெரும்பாலும் நாவல்கள் உணர்வுகளால் தான் விரியும். ஆனால் வேள்பாரி உணர்வுகளோடு விஷுவல்ஸும் போட்டிப் போட்டுக்கொண்டு விரிந்தது. இந்த புத்தகத்தை பாடப்புத்தகமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
முதலில் எனது கனவு படமாக இருந்தது எந்திரன். இப்போது எனது கனவு படம் வேள்பாரி. எப்போதும் ஒரு பெரிய படம் எடுத்தால் இது சந்திரலேகா மாதிரி பிரம்மாண்டமாக இருக்கு என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே சந்திரலேகாவோடு ஒப்பிடுகிற மாதிரியும் அதற்கு மேலையும் ஒரு படமாக வேள்பாரி வரும் என நம்புகிறேன். கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான காவியமாக ஒரு பெருமை மிக்க இந்திய படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது. அந்த கனவு நிறைவேறும் என நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக வேள்பாரி நாவலை படமாக்க நினைத்த சங்கர், நாவலின் உரிமையை பெற்றார். மேலும் படத்திற்கான திரைக்கதையை கரோனா காலக்கட்டத்திலேயே எழுதி முடித்துவிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படத்தில் சூர்யா நடிப்பதாகவும் பின்பு ரன்வீர் சிங் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதையடுத்து சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேள்பாரி பற்றி பேசியுள்ள சங்கர் விரைவில் படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.