சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் குறைவான எதிர்பார்ப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.
சமீபகாலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முழுதாக நிறைவேறவில்லை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. நேற்று முதல் நாள் முதல் காட்சியை ரசிகரக்ளுடன் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரும் அஜித்தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட சில திரை பிரலங்களும் கண்டு கழித்தனர்.
இந்த நிலையில் இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ஜாய் பண்ணக்கூடிய தியேட்டர் மொமெண்ட்ஸுகள் அதிகம் இருக்கும் ஒரு என்கேஜிங்கான கமர்ஷியல் எண்டர்டெயினர். எமோஷனையும் இன்னும் சில விஷயத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ், சிறப்பாக கனெக்ட் செய்திருந்தார். அதே போல் காதலையும் க்ரைமையும் ஒரே ட்ராக்கில் இணைத்திருந்தது சிறப்பு. சிவகார்த்திகேயனின் கதாபாத்திர வடிவம் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமானதாகவும் அமைக்கப்பட்டிருந்தது. அதை அவர் அற்புதமாக கையாண்டு ஆக்ஷன் ஹீரோவாக அசத்துகிறார்.
அனிருத்தின் பின்னணி இசை தெறிக்கிறது. வித்யுத் ஜமாலின் நடிப்பு, வாவ். அவரது ஸ்டைலில் இருந்து ஆடியன்ஸால் வெளியே வரமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.