
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பதான்' படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க ஜான் ஆபிரகாம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மும்பையில் பாந்த்ரா பகுதியில் 'மன்னாத்' என அழைக்கப்படும் தனது வீட்டில் வசித்து வருகிறார் ஷாருக்கான். இந்த வீட்டில் முன்பு ஷாருக்கானை காண அவ்வப்போது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவரது வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். சமீபத்தில் கூட ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் உள்ள பெயர்ப் பலகைகள் கருப்பு வர்ணத்தில் முன்பு இருந்தது. இப்போது அந்தப் பலகைகள் வைரக்கற்கள் பதியப்பட்டது போல் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர்ப் பலகை பாதிக்கப்பட்டிருந்தது அதன் காரணமாகப் பலகை இல்லாமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இப்போது மீண்டும் புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர்ப் பலகை பதியப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே வைரக்கற்கள்தான் எனச் சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர்.
இது தொடர்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், "இந்தப் பெயர்ப்பலகை நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். பாசிட்டிவ், உற்சாகம் மற்றும் அமைதியான அதிர்வை வெளியிடும் கண்ணாடி படிகங்கள் கொண்ட பொருளால் செய்யப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்க்கையில் அந்தப் பலகை வைரக்கற்களால் பதியப்பட்டது இல்லை எனத் தெரிகிறது.