ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்நிலையில் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள்படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். பின்பு நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்துஉரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
தனது அனுபவங்களை பகிர்ந்து ஷாருக்கான் வெளியிட்டுள்ள இப்பதிவு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்பதிவை ரஜினி, விஜய் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.