
கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஷாம் சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி, படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ஷாம். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ஷாம் பேசுகையில்...
"அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார். இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ப்ளஸ் சிவா அண்ணன் படம். டபுள் தமாக்கா உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்கு போனேன். அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிப்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செம ஜாலியான, நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம். கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன். இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மேலும் வெளி தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவிதமாக வரும் 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் பார்க்கலாம். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக, இணையதள நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்றார்.