
நடிகர் விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு ரசிகை சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டின் முன்பு நின்று கொண்டு அவரைப் பார்க்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "காஞ்சிபுரத்தில் இருந்து உங்களை பார்க்க வந்திருக்கிறேன். உங்களை எப்படியாச்சும் பார்த்து விடனும் அண்ணா. உங்கள நேர்ல தான் பார்க்க முடியல. இப்போது உங்க வீடு கேமரா முன்னாடி பேசுறேன். உங்க வீடு வரையும் வந்துட்டேன். உங்களை பார்த்து ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்தா போதும் அண்ணா. ப்ளீஸ்..." என கண் கலங்கி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். அந்த பதிவில், "நடிகர் விஜய், இந்த பாசமிகு காஞ்சிபுரம் சார்ந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் திரைப்படங்களின் நடிகர்களை ஓர் முறையாவது சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுவது இயல்பு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஒரு குழந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்தக் குழந்தையின் ஆசையை வீடியோகால் மூலம் விஜய் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.