Skip to main content

'சின்ன மச்சான் செவத்த மச்சான்' புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் 

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
senthil ganesh

 

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான செந்தில் கணேஷ் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடலை பாடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இவரின் இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்று யூடியூப்பில் இன்று பல மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்து சாதனை படத்துவரும் நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான செந்தில் கணேஷ் குழு 'கரிமுகன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள். செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்க காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ, ரா.கா.செந்தில், இயக்குனர் செல்ல தங்கையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை செல்ல தங்கையா இயக்குகிறார். மேலும் இப்படம் குறித்து இயக்குனர் பேசியபோது...

 

 

 

"நானும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். எங்கள் குழுவைப்பற்றி எல்லோருக்குமே தெரியும். ஏற்கெனவே செந்தில் கணேஷை  நாயகனாக்கி 'திருடு போகாத மனசு' என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து 'கரிமுகன்' படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது தான் அவர் விஜய் டிவியில் பாடி புகழ் பெற்று விட்டார். இது எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சி. 'திருடு போகாத மனசு' படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்த படத்தில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால் முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த  இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம். இதில் செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை செந்தில் கணேஷ் பாடி இருக்கிறார். படப்பிடிப்பு புதுக்கோட்டை, கோட்டை பட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. 'கரிமுகன்' படத்தின் முன்னோட்ட  வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னமச்சான்' பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி பாடிய அடுத்த பாடல் 

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
en kadhali seen podra

 

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்து, அங்காடிதெரு மகேஷ், ஷாலு இணைந்து நடித்த படம் 'என் காதலி சீன் போடுறா'. 23 நாட்களில் படமான இப்படத்தில் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா, அம்பானிசங்கர், தியா, தென்னவன், வையாபுரி, விஜய் டிவி.கோகுல், நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம்சேவா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது....

 

 

"ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில்  கலக்கி இருக்கிறார். நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் -  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். 'நிலா கல்லுல செதுக்கிய சிலையா' என்று துவங்கும் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட் மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது" என்றார்.

 

 

Next Story

நலிவடைந்த நெசவு தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை- செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி தம்பதியினரின் அரிதாரம்!!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

Senthilaganesh Rajalakshmi

 

பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞர்களான செந்தில்கணேஷ் ராஜலட்சுமி ஆகியோர் அரிதாரம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளனர்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசான 50இலட்சத்தை செந்தில்கணேஷ் தட்டி சென்றார். அதுபோல் அவருடைய மனைவி ராஜலட்சுமிக்கு ஆறுதல் பரிசாக 5லட்சத்தை விஜய் டிவி வழங்கியது. இப்படி ராஜலட்சுமி பெற்ற பரிசு  ஐந்து இலட்சத்தை நலிவடைந்த நெசவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிததொகை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

 

இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த கலைப்பிரிவினர் சார்பாக மாடு ஆட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதன்பின் இந்த விழாவில் கலந்து கொண்ட  தொழிலதிபர் ரத்தினம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் அங்கிங்கு இசைக்குழுவின் நிறுவனர் அங்கிங்கு செல்லமுத்தையா,பட்டிமன்ற பேச்சாளர் ஜெயசித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நெசவாளர் குழந்தைகள் 120 பேருக்கு தலா 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினார்கள்.

 

இதுபற்றி செந்தில்கணேஷ் ராஜலட்சுமி தம்பதிகள் கூறும்போது... இந்த அரிதாரம் அறக்கட்டளை மூலம் எதிர்காலத்தில் நலிவடைந்து வரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்ய உள்ளோம் என்றனர். நிகழ்ச்சியில் நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த நாடகம் நடைபெற்றது!