
தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.
இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “வாழ்க்கையில் உலகம் முழுவதும் பார்த்தால், தற்கொலை, மன அழுத்தம் இந்த இரண்டையும் பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது. நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறேன். இப்போது கிடையாது. பல வருஷங்களுக்கு முன்பாக. ஒவ்வொரு தடவையும் நமக்குள் ஒரு குரல் பொறுமையா இரு... என ஆழமாக கேட்கும். எதோ கடவுள் சொல்லுகிறார் என விட்டுவிடுவேன். அப்புறம் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் போது, இதெல்லாம் பார்க்காமல் போயிருப்போம் என நினைப்பது உண்டு. தற்கொலை செய்பவர்களின் எண்ணம், அடுத்த ஜென்மத்திலாவது நிம்மதியா இருப்போம் என்றுதான் இருக்கும்.
நமக்கு கேட்கும் அந்த ஆழமான குரல், கடவுளாக இருக்கலாம். அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அதற்கு ஒரு பெயரை வைத்து கொள்ளுங்கள். கண்டிப்பாக தற்கொலை செய்பவர்களுக்கு அந்த குரல் கேட்கும். நிறைய பேர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பார்கள். நான் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். மன அழுத்தம் இருந்தால், ஆமாம் நான் மன அழுத்தத்தில் இருக்கேன்...அதனால் என்ன... என கேட்டால் ஒரு வாரத்தில் அது போய் விடும். எந்த விஷயமாக இருந்தாலும் அது கூட சண்டை போடக்கூடாது. ஆமாம் என ஒத்துக்கிட்டு கடந்து போய் விட வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டிப்பாக இருக்கும்” என்றார். அவர் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படும் நிலையில் அது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.