தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குதான் முதன்மையான ரசிகர்கள் உருவாகிறார்கள். அதை தாண்டி இயக்குனர்களுக்கு என்று தனித்துவமாக ரசிகர்கள் உருவாவதெல்லாம் அபூர்வம் என்றே சொல்லலாம். அப்படி தமிழ் சினிமாவில் தன்னுடைய இயக்கத்திற்கு என்று தனி ரசிகர்களை வைத்திருந்தவர்கள் யார் என்றால் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்னம், அவ்வரிசையில் இக்காலகட்டத்தில் செல்வராகவன் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

அவர் வரிசையாக வெற்றி படங்களையும், தோல்வி படங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கும்போது கூட அவருக்கு என்று இவ்வளவு ரசிகர்கள் உருவாகி இருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் தமிழ் சினிமாவிலிருந்து இடைவேளை எடுத்துக்கொண்ட பின்னர் அவருடைய பழைய படங்களை பார்த்த பல இளைஞர்களும் செல்வாவை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். செல்வாவின் படங்கள் இனி வெளியாகாதா நாம் அதை திரையரங்கு சென்று ரசிக்க மாட்டோமா என பலர் ஏங்கினார்கள். செல்வராகவனின் பிறந்தநாளை ஒட்டி, மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அவரது படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வா மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார், அதுவும் யுவன்ஷங்கர் ராஜாவுடன். முதலில் சிம்புவை வைத்து ‘கான்’என்னும் படத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால், போஸ்டரை தாண்டி வேறு எதுவும் நடக்கவில்லை. அடுத்து எஸ்.ஜே. சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை இயக்கினார். படத்தின் பாடல்கள் வெளியாகின, ட்ரைலர் வெளியாகின ஆனால் இன்றுவரை படம் வெளியாகவில்லை. அதேபோல சந்தானத்தை வைத்து இயக்கிய மன்னவன் வந்தானடி படமும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது ஆனால் வெளியாகவில்லை.
செல்வராகவன் சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்றவுடன் செல்வாவின் ரசிகர்களுக்கு ஒரு பெரும் சந்தோசம் ஏற்பட்டது. காரணம், இந்த படம் கண்டிப்பாக வெளிவந்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான். அப்படியிருந்தும் என்.ஜி.கே படப்பிடிப்பு பல காரணங்களால் தள்ளிப்போய் தற்போது மே 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும், ட்ரைலரையும் வெளியிடுகிறார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. செல்வாவின் ரசிகர்கள் ட்ரைலரை பார்க்கவும், பாடல்களை கேட்கவும் தயாராக இருக்கிறீர்களா?