
இந்திய கிரிக்கெட்டின் கூல் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடியவர், ஆகஸ்ட் 15 இரவு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்குப் புகழாரம் சூட்டி சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தோனி ஓய்வு தொடர்பாக தெரிவிக்கையில், "எங்களை அதிகபட்சம் ஊக்குவித்ததற்கும், பொழுதுபோக்கியதற்கும் உங்களுக்கு பெரிய நன்றி.
நீங்கள் என்றுமே ஒரு அற்புதமான தலைவர் தோனி. எங்களை ஆச்சரியப்படுத்த உங்களிடம் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு உறுதியாக தெரியும். உங்கள் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்காக காத்திருக்கிறேன்." என்றார்.
சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு இயக்குனர் சீனு ராமாசாமி "சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் நட்சத்திரமாக ஆன நீங்களும் அதிக ஊக்கமும், பொழுதுபோக்கும் தந்தவர் சிவகார்த்திகேயன்.
தோனியைப் போலவே உங்கள் களத்தில் பெரும்பாலும் புதியவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாய்ப்பு தந்தீர்கள். அடிமட்டத்திலிருந்து வந்து நீங்கள் இருவரும் வெற்றி பெற்றீர்கள்" என்று தெரிவித்தார். இந்த ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சீனு ராமசாமியின் இந்த ட்வீட்க்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.