”விஜய் சேதுபதிக்காக சிவாஜி வீட்டுக்கு போனேன்” - மேடையில் அழுத சீனு ராமசாமி

Seenu Ramasamy

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதன்முறையாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்த பிறகு, படப்பிடிப்பிற்கு கிளம்புவதற்கு ஒருநாள் முன்பாக எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்குச் செல்வேன். அங்கு அந்தக் கதையை வைத்து வணங்குவேன். அதன் பிறகுதான் படப்பிடிப்பிற்கு கிளம்புவேன். இதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன். ஆனால், மாமனிதன் ஷூட்டிங் போவதற்கு முன்பாக போக் ரோடு சென்றேன். அங்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டின் சுவரையொட்டி இருக்கும் விநாயகர் கோவிலில் கதை புத்தகத்தை வைத்து ஒரு நிமிடம் வணங்கினேன். இந்தப் படத்தில் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதி உங்களில் பாதி பெயரை வாங்க வேண்டும் என்று வேண்டினேன். மற்ற படங்களுக்கு எம்.ஜி.ஆர். வீட்டிற்கு சென்றுவிட்டு இப்போது மட்டும் ஏன் சிவாஜி வீடு சென்றேன் தெரியுமா?

சினிமாவில் நடிப்பவர்களை இன்றைக்கும் கூத்தாடி என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அன்றைக்கு எவ்வளவு கூறியிருப்பார்கள். கூத்தாடி என்றுஅழைத்த காலகட்டத்தில் ஒருவர் நடிகர் திலகம் எனப் பெயர் எடுத்திருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். முதன்முறையாக தமிழ் சினிமாவை நோக்கி உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அதேபோல இந்தப் படத்தில் நடிப்பதன் மூலமாக உலகத்தையே விஜய் சேதுபதி திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் தான் அன்னை இல்லம் சென்றேன்” எனத் தெரிவித்தார்.

இதை மேடையில் தெரிவிக்கும் போதே சீனு ராமசாமி கண்கலங்கினார். இதையடுத்து, எழுந்து வந்த விஜய் சேதுபதி அவரை தண்ணீர் கொடுத்து ஆறுதல் படுத்தினார்.

seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe