
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமாக இன்று வெளியாகியுள்ள படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ளனர்.
இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பாராட்டினர். இதையடுத்து சிறப்பு காட்சியை பார்த்த பாலா மனமுடைந்து மாரி செல்வராஜை கட்டியனைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் என பல்வேறு பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக படக்குழுவை பாராட்டினர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து செய்தியை மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்துக் குறிப்பில், “அன்புத் தம்பி மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கியுள்ள வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தம்பி மாரி செல்வராஜ் தம் இளம்வயதில் நிகழ்ந்த கனத்த சோகத்தைப் பசுமைமாறா நினைவுகளுடன், வாழையடி வாழையாக இம்மண்ணில் வளர்ந்த வர்க்கப் புரட்சியையும் சேர்த்துச் சொல்லும் காவியமாக 'வாழை' திரைப்படத்தைப் படைத்தளித்துள்ளார். பணிச்சூழல் காரணமாகப் படத்தினை உடனடியாக என்னால் பார்க்க முடியாவிட்டாலும், சிவநைந்தணாக வரும் பொன்வேல், சேகராக வரும் ராகுல், பூங்கொடி ஆசிரியையாக வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் 'கர்ணன்' ஜானகி, கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோரின் உணர்வுப்பூர்வமான இயல்பான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்படுவது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேராவலை எனக்குள் தூண்டுகிறது.

சகோதரர் சந்தோஷ் நாராயணனின் மனதை வருடும் இசையும், பாடல்களும், தம்பி தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், தம்பி சூர்யாவின் படத்தொகுப்பும் விமர்சகர்களால் பாராட்டப்படுவது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 'வாழை' திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்! தன் வலி சுமந்த வாழ்வியல் அனுபவங்களையே கலைப்படைப்புகளாக தரும் தம்பி மாரி செல்வராஜூக்கு, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களைத் தொடர்ந்து 'வாழை' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக அமைந்துள்ளதற்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்! உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சொந்தங்கள் 'வாழை' திரைப்படத்தைத் திரையரங்கிற்குச் சென்று கண்டு ரசிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றியும் பரியமும் அண்ணா ….உங்கள் வாழ்த்து அத்தனை ஊக்கமளிக்கிறது @Seeman4TN ❤️❤️❤️ pic.twitter.com/uncYhTslh0— Mari Selvaraj (@mari_selvaraj) August 23, 2024