Skip to main content

"மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்" - டி.ராஜேந்தர் குறித்து சீமான் பதிவு

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

seeman tweet about t rajendar health

 

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும் அவரின் மகன் சிம்பு நேற்று அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து டி.ராஜேந்தர் நலம் பெற வேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டி. ராஜேந்தர் நலம் பெற வேண்டி ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய ஐயா த.இராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். தற்போது உயர் மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ஐயா ராஜேந்தர் அவர்கள் விரைந்து நலம்பெற்றுத் திரும்ப விழைகிறேன். அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது அன்பையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.