தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் கடந்த 1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரவேற்பை தொடர்ந்து தனுஷ் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், கருப்பசாமி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு செய்தார். இந்த நிலையில் இப்படம் பார்த்து நாம் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனுஷிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “தனுஷ் இருக்கிற உயரத்துக்கு தன்னுடைய கிராமம் தேடி போய், இப்படி ஒரு வாழ்வியலை பதிவு செய்ததே பெரிய பாராட்டுக்குரியது. சாதாரண ஒரு இட்லி கடை. அதுல படிக்கிற பையன்கிட்ட காசு வாங்குறதில்ல. அது ஒரு சின்ன நிகழ்வு. ஆனால் அதை முடிக்கும் போது அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை. கண்ணுக்குட்டியை வைத்து ஒரு கவிதைத்தனமான முடிவு.
மன நிறைவோடு இந்த படத்தை பார்த்து ரசிச்சேன். ஒவ்வொரு காட்சிகள் நகரும் போதும், அவ்வளவு மகிழ்வோடு நெகிழ்ந்தேன். தனுஷுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்புரமணியன் முன்னிலையில் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீரினிங் ஏற்பாடு செய்து திரையிடப்பட்டது.