Skip to main content

“மாவீரர்த் தெய்வங்களை இழிவுபடுத்த முயல்கின்றனர்” - சீமான் எதிர்ப்பு

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
seeman against Otraipanaimaram movie release

தனிகைவேல் தயாரிப்பில் புதியவன் ராசையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஒற்றைப் பனை மரம்’. அஷ்வமித்ரா இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஈழத்தாயக  விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது!

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. 

இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும்  அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும். எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.

போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்