தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் ‘வரலாறு திரும்புகிறது’ என்ற வாசகத்துடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் விஜய் இருக்கும்படி மேடையின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் விஜய்யின் மாநாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான், தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டி பட முன்னோட்ட நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு சித்தாந்தத்தை இன்னொரு சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். சினிமாவால் வீழ்த்த முடியாது. திராவிடம் என்ற கோட்பாட்டுக்கு எதிராக நாங்கள் தமிழ் தேசிய கோட்பாட்டை முன் வைக்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் விஜய் வைக்கிற கோட்பாட்டில், என்ன வித்தியாசம் இருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என முதலில் சொன்னார்கள். ஆனால் இப்போது வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும் என மாத்திவிட்டார்கள். 

தம்பி விஜய், மாநாட்டில் பேசுகிறபொழுது, தான் முன் வைக்கிற கருத்துக்கு ஓட்டு போடுங்கள் என சொல்வதை விட, தன்னுடைய முகத்துக்கு ஓட்டு போடுங்கள் என சொல்கிறார். இன்றைக்கு இருக்கிற முகம், இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து இருக்காது. மாநாட்டு உரையில் கடந்த முறை சொன்ன எந்த தலைவரையும் இந்த முறை கொள்கை வழிகாட்டியாக பேசப்படவில்லை. மாறாக அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் பேசுகிறார்கள். எந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என விஜய் சொல்கிறாரோ, அந்த கட்சியை தொடங்கிய தலைவரையே மாநாட்டில் முன் நிறுத்துகிறார். அண்ணா வழியில் அவர் தொடங்கிய கட்சியை ஒழிப்பது என்பது அடிப்படையிலே வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.