seeman about mansoor ali khan trisha issue

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

Advertisment

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.

Advertisment

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். என் கட்சியில் வேட்பாளராக கூட நின்றிருக்கிறார். இன உணர்வு மிக்க ஒரு தமிழர். அவரை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கும் போது மனசு கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில் எந்த கருத்தும் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் என்ன பேசினார் என்றே நான் கேட்கவில்லை.

எனக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்கில் பேசியிருக்க மாட்டார். இயற்கையாகவே அவர் வேடிக்கையாக பேசுபவர். அதனால் அது மாதிரி நகைச்சுவையாக பேசியிருப்பார். அதை இவ்வுளவு தூரம் எடுத்து விவாதிக்க வேண்டுமா என்பது தான் யோசிக்க தோன்றுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் சங்கம் இதுவரை யார் பக்கம் நின்றிருக்கிறது. சக நடிகர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்த போது, படத்தை வெளியிட விடாமல் தடுத்த போது சங்கம் பேசியிருக்கா? விஜய்க்கு பிரச்சனை வரும் போது பேசுனுச்சா. அவரை விட சிறந்த நடிகர் வேணுமா? நடிகர்களுக்கென்று தமிழ்நாட்டில் கேரளா போல , கர்நாடகா போல உறுதியான ஒரு சங்கம் இருக்கா? இவ்வளவு நாள் இயங்குச்சா இல்லையானே தெரியல” என்றார்.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தஅவர், “மணிப்பூரில் இரண்டு பெண்களை ஆடைகளின்றி வன்கொடுமை செய்து கொலை செய்த போது மகளிர் ஆணையம் தலையிட்டதா? 8 வயது பச்சிளங் குழந்தை ஆசிஃபா கொடுமைக்கு பேசியதா? முதலில் மகளிர் ஆணையம் உயிர்ப்போடு இருக்கா? தமிழ்நாட்டில் எத்தனை வன்கொடுமைகள் நடந்திருக்கு? அதற்கெல்லாம் பேசியிருக்கா?” என கோவமாக பல கேள்விகளை முன் வைத்துப் பேசினார். மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து செயல்பட்டு பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.