Advertisment

“நேற்று ஈழத்தில்; இன்று பாலஸ்தீனத்தில்” - 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குறித்து சீமான்

seeman about jigarthanda double x

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்படத்தை பாராட்டி இரண்டு பக்க அறிக்கையை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பூர்வக்குடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம். உலகெங்கும் பூர்வக்குடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாகத்திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.

'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ, காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அதனாலேயே மற்றொரு குறளில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ என்கிறார். அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச் சிறப்பானது.

Advertisment

இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.

என் மண், என் நிலம், என்னுடைய வாழ்விடம் அதைவிட்டு ஒருபோதும் செல்ல முடியாது.உயிர் போனாலும் இந்த மண்ணில்தான் என்று படம் பேசும் கருத்தில்தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் போராட்டமும் தொடங்கியது. அதுதான் நேற்று ஈழத்தில் நடந்தது; இன்று பாலஸ்தீனத்திலும் நடைபெறுகிறது. 'சூழலியலின் தாய்' வங்காரி மாதாய் உலகெங்கிலும் போர் என்பதே வள வேட்டைக்காகத்தான் நடைபெறுகிறது என்கிறார். அப்பேருண்மையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரைமொழியில் அழுத்தமாகச் சொல்ல முடிந்தது என்பதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாகும். தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது” என்றார். சீமானின் பாராட்டிற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

actor raghava lawrence karthik subbaraj seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe