Skip to main content

"புர்கா படத்தை தடை செய்ய வேண்டும்" - சீமான் கோரிக்கை

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

seeman about burqa movie

 

சர்ஜுன் இயக்கத்தில் மோகன் தயாரிப்பில் கலையரசன், மிர்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புர்கா'. இப்படம் கடந்த 7 ஆம் தேதி (07.04.2023) நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம் குறித்தும் குரான் நூலை குறித்தும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 

 

இந்த நிலையில் புர்கா படத்தை தடை செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் ‘புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போல காட்ட முனைவது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும். குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிவுபடுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனை தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.