Skip to main content

"அங்க போய் திட்டுவார்" - சீமானால் சிரிப்பலையில் நிறைந்த அரங்கம்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

seemaan speech at ilaiyaraaja 80 birthday function

 

திரைத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக தன் இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்ட இளையராஜா தனது 80வது வயதில் நேற்று முதல் அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி இளையராஜாவின் பிறந்தநாள் விழா நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

அப்போது மேடைக்கு ஏறிய சீமான் மற்றும் அன்புமணியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பின்பு பேசிய சீமான், "இளையராஜாவை வாழ்த்துகிற வாய்ப்பை பெற்றமைக்கு உண்மையிலே மகிழ்கிறோம். பிறந்த பலனை அடைந்துவிட்டது போல நெகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள நிறைய பேருக்கு அவர்களது தாய் பாடிய தாலாட்டு பாட்டு நினைவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. என் அம்மா பாடிய எந்த பாட்டை கேட்டு நான் தூங்கினேன் என தெரியாது. ஆனால் எங்களை எல்லாம் தாலாட்டி தூங்க வைத்த ஒரே பாட்டு எங்களின் ஆண் தாய் இளையராஜாவின் பட்டு தான். 

 

பலபேரின் வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். என் அப்பா, படிப்பை முடித்துவிட்டு என்னை ராணுவத்துக்கு அல்லது வாத்தியாராக போகச் சொன்னார். ஆனால் இங்க கொண்டு வந்து இறக்கிவிட்டது மேதை இளையராஜா தான். பாட்டை போட்டு திசை திருப்பிய ஆட்களுள் இளையராஜா தான் முதன்மையானவர். இசையை படித்தவுடன் அதை வைத்து பாட்டு போட்டுவிடலாம். ஏன் நான் கூட பாடுவேன். யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் மனித மன உணர்வை இசையால் மொழி பெயர்க்கிற ஆற்றல் அளப்பரியது. அப்படி ஆற்றல் பெற்ற இசைமேதை எங்கள் இளையராஜா" என்றார்.

 

மேலும் கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் ஒரு காட்சியை விவரித்து 'அடி ஆத்தாடி...' பாடலை பாடினார். அதன் பிறகு பேசிய அவர், "இளையராஜா முன்பு பாடி காட்டியதற்கு வருந்துகிறேன். பின்பு அங்க போய் ஸ்ருதி இல்லாம பாடுறார்ன்னு திட்டுவாரு" என்று சொன்னதும் அரங்கம் சிரிப்பலையில் நிறைந்தது. பிறகு "வார்த்தைகளால் சொல்லி கடத்த முடியாது. அதற்காகத் தான் பாடி காட்டுகிறேன்" என்று பேசினார் சீமான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.