Skip to main content

“வீரப்பன் சொன்னதை ரஜினியிடம் சொல்லவில்லை” - ரகசியத்தை உடைத்த நக்கீரன் ஆசிரியர்!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 A secret not told to Rajini - Nakkheeran Gopal

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது “இந்த படைப்பிற்காக எத்தனையோ பேரை அணுகிய போதும் தயாரிக்க முன் வராத போது, ஜீ5 தைரியமாக வந்தது. அவர்களுக்கு நன்றி, அத்தோடு இந்த படைப்பை பிரபாவதி, ஜெய், வசந்த் கடுமையாக உழைத்து, ரொம்ப நேர்மையாக கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள். 

வீரப்பனைப் பற்றிய படத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி சொல்ல வேண்டும் ஏனெனில், அந்த மக்களுக்காத்தான் நீதிபதி கிருஷ்ணய்யரிடம் போய் நின்றோம். சதாசிவம் கமிசன் முன்பாக பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு போய் நிறுத்தினோம். அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனை இந்த படைப்பின் மூலமாக செய்திருக்கிறார்கள். முதன் முதலில் வீரப்பனின் படத்தைப் பார்த்த போது காசநோயாளி போன்ற ஒரு படத்தை காட்டினார்கள். பிறகு நக்கீரன் தான் முதன்முதலில் மீசையோடு இருக்கும் வீரப்பனின் படத்தை வெளியிட்டது.

என்னைப் பார்ப்பதற்கே வீரப்பன் நூறு டெஸ்ட் வைத்துத்தான் 11 முறையும் சந்தித்தார். வீரப்பனை வீடியோ கேமராவில் பேட்டி எடுத்த போது ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னார். ஆனால், இதுவரை அதை நான் ரஜினியிடம் சொல்லவில்லை. ஜீ5 ஓடிடி தளத்தில் 14-ந் தேதி வெளியான பிறகு தான் அவரே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். 

சார்ந்த செய்திகள்