பிணத்தை வைத்துக்கொண்டு சாவு வீட்டை கதைக்களமாக கொண்டு இதுவரை தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியானது கிடையாது. பல படங்களில் ஒரு சீனாக வைத்து அவை இடம் பெற்று இருந்தாலும், ஒரு முழு நீள திரைப்படமாக பெரிதாக எந்த படமும் இதுவரை சாவு வீட்டை மையமாக வைத்து தயாராகவில்லை. இந்த முறை இந்த கதைக்களத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் சாவீ திரைப்படம் எந்த அளவுக்கு ஈர்ப்பு உண்டாக்கி இருக்கிறது.

Advertisment

பானா காத்தாடி பட புகழ் நடிகர் உதய் தீப், தன் முறைப்பெண் கவிதா சுரேஷை காதலிக்கிறார். ஆனால் நாயகனின் மாமாவுக்கு இந்த காதலில் உடன்பாடு இல்லை. அது மட்டும் இல்லாமல் தன் தந்தையின் மரணத்தில் மாமாவுக்கு பங்கு இருப்பதால் நாயகன் உதய் தீப்புக்கும், மாமா மேல் கோபம் இருக்கிறது. இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் நாயகி கவிதா சுரேஷின் தந்தையும், நாயகனின் மாமா இறந்து விடுகிறார். அவரது பிணம் வீட்டில் வைக்கப்படுகிறது. அடுத்த நாள் இறுதி சடங்கு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு அந்த பிணம் திடீரென காணாமல் போகிறது. பிணம் காணாமல் போன நேரத்தில் உதய் தீப் சம்பவ இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே உதய்க்கும் அவர் மாமாவுக்கும் பகை இருக்கின்றதால் உதய் மேல் சந்தேக பார்வை திரும்புகிறது. இன்னொரு பக்கம் போலீசார், அந்த பிணத்தை கடத்தியது யார் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இறுதியில் அந்த பிணத்திற்கு என்னவானது? எங்கே காணாமல் போனது? அதை கண்டுபிடித்தார்களா, இல்லையா? இந்த சம்பவத்துக்கும் உதய்க்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

Advertisment

savi2

முதலில் சாவு வீடு என டைட்டில் வைத்துவிட்டு பின்னர் சென்டிமென்ட் காக சாவீ என பெயர் மாற்றப்பட்டு வித்தியாசமான கதையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், ஒரு டார்க் காமெடி படப்பாடியில் உருவாகி இருக்கிறது. படம் ஆரம்பித்து மெதுவாக நகர்ந்து போகப் போக மாமா இறந்தவுடன் வேகம் எடுக்கும் திரைப்படம் அதன் பின் சில பல திருப்புமுனைகளுக்கு இடையே நகர்ந்து இறுதி கட்ட காட்சிகளில் யாரும் எதிர்பாராத வகையில் வித்தியாசமான முறையில் ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருக்கின்றனர். வித்தியாசமாக கதையை யோசித்த புதுமுக இயக்குநர் ஆண்டன் அஜித், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார். படத்தின் பட்ஜெட்டும் மிகவும் லோவாக இருப்பது காட்சிகளில் தென்படுகிறது. அதுவும் படத்திற்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் எந்த ஒரு இடத்திலும் தெளிவில்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் மிகவும் சினிமா தனமாக நகர்வதும் படத்திற்கு இன்னொரு மைனஸ். மற்றபடி இறுதி கட்ட காட்சிகள் ஒரு நல்ல மெசேஜோடு சில பல டுவிஸ்ட்கள் வைத்து முடித்திருப்பது சற்றே ஆறுதல் அளித்து இருக்கிறது. திரைக்கதைக்கு இன்னமும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

பானா காத்தாடி படம் மூலம் பரீட்சையமான நடிகர் உதய் தீப் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை இந்த படத்தில் செய்திருக்கிறார். நாயகி கவிதா சுரேஷ் வழக்கமான நாயகியாக வழக்கமான விஷயத்தை செய்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைவருமே புது முகமாக இருக்கிறார்கள். அவரவர் வேலையை அவரவர் நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

Advertisment

savi3

பூபதி வெங்கடேசன் ஒளிப்பதிவு ஓரளவு நேர்த்தியாக இருக்கிறது. சரண் ராகவன் ரகுராம் இசையில் பின்னணி இசை ஓகே. படத்தின் இறுதி கட்டத்தில் இருந்த விறுவிறுப்பும் பல்வேறு திருப்புமுனைகளும் நிறைந்து அதே போல் தூக்கம் என்பது ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் அதேசமயம் போதை பொருள் பயன்பாடு நம்மை எந்த அளவிற்கு பின்னோக்கி இழுத்து செல்கிறது என்ற மெசேஜை வைத்து விறுவிறுப்பாக கதை சொன்ன இயக்குநர் இதேபோல் படம் முழுவதும் காட்சி அமைப்புகளை உருவாக்கி இருந்தால் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும்.


சாவீ - சம்பிரதாயம்