ADVERTISEMENT

“கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா என முரசொலி மாறன் கேட்டார்” - சத்யராஜ்

07:26 PM Sep 19, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளர் ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார்.

பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "இந்த புத்தகத்தில், நூறாவது நாள் படத்தின் அனுபவம் குறித்து எழுதியிருந்தார்கள். அதில், நாங்கள் ஒரு முறை 'எங்கேயும் கங்கை' திரைப்பட கலந்துரையாடலுக்காக அழகர் மலை சென்றிருந்தோம். அங்கு படத்தின் கதையை குறித்து பேசாமல், சாப்பிடுவதும் தூங்குவதுமாக நாட்கள் கழிந்தது. அப்போது தயாரிப்பாளர் கலைஞானமிடம் கேட்டேன், படத்தின் கதை பற்றி எப்போது விவாதிப்போம் என. அவர் அதற்கு, 'யோவ் இழுத்து வைத்து குத்தினால், கதை செத்துப் போயிவிடும். எனவே பொறுமையாக வரட்டும்' என்றார். அடுத்த நாள் காலை முதல் ஆளாக எழுந்து செய்தித்தாளை பார்த்தேன். அதில், 'ஒன்பது பேர் ஒரே குடும்பத்தில் கொலை. நூறாவது நாள் படம் பார்த்து கொலை உணர்வு ஏற்பட்டது என்று ஜெயப்ரகாஷ் பேட்டி' என தலைப்புச் செய்தி வந்தது. பின் மாலை மதுரையிலுள்ள தியேட்டருக்கு சென்றால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு மட்டுமே இருந்த ஜனத் திரள் நான் நடித்த படத்திற்கும் இருந்தது.

படம் மிகப்பெரிய வெற்றிபெற, எனக்கும் கொடூர வில்லன் என்ற பெயர் கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, நான் இயக்குநராகவும் முக்கிய வில்லனாகவும் இயங்கியது 24 மணி நேரம் படத்தில் தான். அதில் நான் பேசிய 'ஏன் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே' வசனம் மிகப் பிரபலமானது. அதேபோல அன்பின் முகவரி படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனை நடிக்க வைத்ததும் சவாலாகத் தான் இருந்தது. ஏனெனில், அவர் முன்பு டப்பிங் பேசிய முறை முற்றிலும் வேறு. நாங்கள் பயன்படுத்தியது லூப் சிஸ்டம். எனவே, எஸ்.எஸ்.ஆர்-ன் தோளை ஒவ்வொரு வசனம் வரும்போதும் தட்டிக்கொடுத்து பேசவைத்தோம். மிகப் பெரிய வசனங்களை எல்லாம் எளிதில் பேசக் கூடியவர் எஸ்.எஸ்.ஆர்., ஆனால் இந்த நவீன டெக்னாலாஜியால் சற்று தடுமாறினார். அப்போது ஜீவ பாரதி தான் உதவினார். இதுபோன்று ஒருமுறை கலைஞர், நெல்சன் மண்டேலா கட்சியில் இருந்த ஒரு உறுப்பினரின் பெயரை மறந்துவிட்டார். உடனே ஜீவ பாரதி அதனை சொன்னார். பின்பு தான் தெரிந்தது கலைஞர், ஜீவ பாரதியை சோதித்து பார்த்திருக்கிறார் என. ஏனென்றால், எதையும் எளிதில் மறக்கக் கூடிய நபரில்லை கலைஞர்.

தற்போது உள்ள இயக்குநர்கள் ஒரு வருடத்திற்கு 1 படம் தான் எடுக்கிறார்கள். ஆனால், மணிவண்ணன் ஒரே சமயத்தில் நான்கு படம் வரை இயக்கியுள்ளார். உதாரணமாக, பாலைவன ரோஜாக்கள் இயக்கும் போதே திருப்பூர் மணி 'விடிஞ்சா கல்யாணம்' படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அப்போது மணிவண்ணன் கதையை யோசிக்கக் கூடவில்லை. இருந்தும், தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரம் படப்பிடிப்பு வைக்க சம்மதித்து விட்டார். நான் மணிவண்ணனிடம் கேட்டேன், கதையே இன்னும் தயாராகவில்லையே என. அவர் சொன்னார், ‘அதெல்லாம் பாத்துக்கலாம் ஒரு வாரம் இருக்கே’ என சொல்லிவிட்டார். பிறகு மணிவண்ணன், 'யோ என்னையா கதை வந்தா சொல்லமாட்டோமா' என நகைச்சுவையாக நக்கலடித்தார். பின்பு, குடும்பப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சுஜாதவை கொலையாளியாக சித்தரித்து ஒரு படம் எடுப்போம் எனத் தீர்மானித்து. அடுத்த நாள் கதை பற்றி பேசுவதற்கு விஜிபி கடற்கரை சென்றுவிட்டோம்.

அங்கு உரையாடும் போது சொன்னேன், சிவாஜி நடித்த புதிய பறவை, ஒரு ஆங்கில நாவலை தழுவி மாற்றி எடுத்தார்கள். நாம் புதிய பறவையை மாற்றி எடுப்போம் என்றேன். எனவே, படத்தின் முதல்பாதியை மதிய உணவு நேரத்திற்கு முன்பே தயார்செய்து விட்டார் மணிவண்ணன். அடுத்து இரண்டாம் பாதி வீடு திரும்புவதற்குள் முடித்துவிட்டார். பின்னர், இந்த கதையை தயாரிப்பாளரிடம் 'விடிஞ்சா கல்யாணம் அதற்குள் குடும்பத்தில் ஆயிரத்து எட்டு சிக்கல்' என சொல்லி படத்தை எடுத்தோம். இதனையடுத்து பாலைவன ரோஜாக்களும், விடிஞ்சா கல்யாணம் படமும் ஒரே நாளில் வெளிவந்து நூறு நாள் ஓடியது. இதுபோன்று சிவாஜிக்கும் விஜயகாந்துக்கும் படங்கள் ஓடியுள்ளது. ஆனால், ஒரே இயக்குநர், ஒரே கதாநாயகன் என்ற முறையில் என்னுடையது முதல் வெற்றி. விடிஞ்சா கல்யாணம் படத்திற்கு இளையராஜா பாடல்கள் அமைத்தாலும், ரீ-ரெகார்டிங் எம்.எஸ்.வி தான். அவரைப் போன்று தன்மையான நபரை பார்த்ததில்லை நான். ஏனென்றால் அத்துனை பெரிய இசையமைப்பாளர், ஜீவ பாரதியிடம் இசைத்துவிட்டு நன்றாக இருக்கிறதா என கேட்டார். இது போன்று ஆர்.சுந்தரராஜன் அவருக்கும் நடந்ததுள்ளது.

பின்னர், முதல் வசந்தம் படத்தின் 50வது நாள் விழாவில், ஜீவ பாரதி நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து பின் செல்வார். அதேபோன்ற காட்சியைத் தான் அமைதிப்படையில் பயன்படுத்தி இருப்போம். அந்த காலத்தில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போதே நினைத்துக் கொள்வேன், 'நாம் சினிமாவில் வளர்ந்துவிட்டால் பெரிய நடிகர்கள் மத்தியில் சிகெரட் பிடிப்பது திமிராகத் தெரியும். அதனால, இப்பவே பிடிச்சிப்போம்' என்று எண்ணுவேன். தொடர்ந்து, வியாசர்பாடியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு என்னை அழைத்து சென்றார்கள். அதில், நான் பேசும்போது, 'கம்யூனிஸ்டுகள் தான் நிஜ ஹீரோ' என பேசினேன். அதற்கு காரணம், நாங்கள் எல்லாம் ஒரு வழக்கு பாய்ந்தாலே ஓடிவிடுவோம். ஆனால் இவர்கள் வழக்குகளுக்கு நடுவே படுத்து தூங்குகிறவர்கள்.

இப்படி ஒரு நாள் மணிவண்ணன் சுவற்றில், கம்யூனிஸ்ட் சின்னத்தை சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில் வரைந்து கொண்டிருந்தார். உடன் தோழர் கல்யாண சுந்தரமும் இருந்தார். இப்படியும் மணிவண்ணன் இருந்துள்ளார். இவருக்கும் மற்ற இயக்குநருக்கும் உள்ள வித்தியாசம், 'பிறர் எழுதியதை எடுப்பார்கள். மணிவண்ணன் எடுத்ததை எழுதுவார்...'. இதனை மனோரமா ஒரு முறை நினைவுபடுத்தி கூறியுள்ளார். அந்தளவு மணிவண்ணன் வசனங்களை எழுதுவதில் வல்லவர். இப்படியாக, பாலைவனச் சோலை படத்தின் வசனத்தை கலைஞர் தான் எழுதினார். ஆனால், அதனை நாங்கள் டிரென்டுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினோம். அப்போது, தயாரிப்பாளர் முரசொலி மாறன் எங்களிடம், 'கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா' எனக் கேட்டுவிட்டார். இருந்தும் கலைஞர் சொல்ல வந்ததைத் தான் மணிவண்ணன் தற்கால சூழலுக்கு தகவமைத்து எழுதியிருப்பார். தொடர்ந்து நான், சத்யா மூவிஸ் நிறுவனத்தில் நடித்து வந்ததால் மற்றொரு படமும் என்னை வைத்து எடுக்க திட்டமிட்டனர். அப்போது மணிவண்ணனை இயக்குநராக வைத்து படம் எடுக்கலாம் என்றேன். ஆனால், ஆர்.எம். வீரப்பன் கொஞ்சம் எடிட்டிங் வேலைகளிலும் ஈடுபடுவார் என்பதனை மணிவண்ணனிடம் சொன்னேன். அவர், 'அட விடுப்பா.... கலைஞரையே ஏமாத்திட்டோம்' என நக்கலடித்தார். இன்னும் இந்த புத்தகத்தை பற்றி நிறைய பேசிக்கொண்டு போகலாம். இதில் இருக்கும் நெருக்கமான சில பகுதிகளுக்கு நான் செல்ல வேண்டாம் என்று தான் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசுகிறேன்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT