Skip to main content

“கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா என முரசொலி மாறன் கேட்டார்” - சத்யராஜ்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

sathyaraj speech in manivannan book release function

 

எழுத்தாளர்  ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார். 

 

பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "இந்த புத்தகத்தில், நூறாவது நாள் படத்தின் அனுபவம் குறித்து எழுதியிருந்தார்கள். அதில், நாங்கள் ஒரு முறை 'எங்கேயும் கங்கை' திரைப்பட கலந்துரையாடலுக்காக அழகர் மலை சென்றிருந்தோம். அங்கு படத்தின் கதையை குறித்து பேசாமல், சாப்பிடுவதும் தூங்குவதுமாக நாட்கள் கழிந்தது. அப்போது தயாரிப்பாளர் கலைஞானமிடம் கேட்டேன், படத்தின் கதை பற்றி எப்போது விவாதிப்போம் என. அவர் அதற்கு, 'யோவ் இழுத்து வைத்து குத்தினால், கதை செத்துப் போயிவிடும். எனவே பொறுமையாக வரட்டும்' என்றார். அடுத்த நாள் காலை முதல் ஆளாக எழுந்து செய்தித்தாளை பார்த்தேன். அதில், 'ஒன்பது பேர் ஒரே குடும்பத்தில் கொலை. நூறாவது நாள் படம் பார்த்து கொலை உணர்வு ஏற்பட்டது என்று ஜெயப்ரகாஷ் பேட்டி' என தலைப்புச் செய்தி வந்தது. பின் மாலை மதுரையிலுள்ள தியேட்டருக்கு சென்றால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு மட்டுமே இருந்த ஜனத் திரள் நான் நடித்த படத்திற்கும் இருந்தது.

 

படம் மிகப்பெரிய வெற்றிபெற, எனக்கும் கொடூர வில்லன் என்ற பெயர் கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, நான் இயக்குநராகவும் முக்கிய வில்லனாகவும் இயங்கியது 24 மணி நேரம் படத்தில் தான். அதில் நான் பேசிய 'ஏன் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே' வசனம் மிகப் பிரபலமானது. அதேபோல அன்பின் முகவரி படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனை நடிக்க வைத்ததும் சவாலாகத் தான் இருந்தது. ஏனெனில், அவர் முன்பு டப்பிங் பேசிய முறை முற்றிலும் வேறு. நாங்கள் பயன்படுத்தியது லூப் சிஸ்டம். எனவே, எஸ்.எஸ்.ஆர்-ன் தோளை ஒவ்வொரு வசனம் வரும்போதும் தட்டிக்கொடுத்து பேசவைத்தோம். மிகப் பெரிய வசனங்களை எல்லாம் எளிதில் பேசக் கூடியவர் எஸ்.எஸ்.ஆர்., ஆனால் இந்த நவீன டெக்னாலாஜியால் சற்று தடுமாறினார். அப்போது ஜீவ பாரதி தான் உதவினார். இதுபோன்று ஒருமுறை கலைஞர், நெல்சன் மண்டேலா கட்சியில் இருந்த ஒரு உறுப்பினரின் பெயரை மறந்துவிட்டார்.  உடனே ஜீவ பாரதி அதனை சொன்னார். பின்பு தான் தெரிந்தது கலைஞர், ஜீவ பாரதியை சோதித்து பார்த்திருக்கிறார் என. ஏனென்றால், எதையும் எளிதில் மறக்கக் கூடிய நபரில்லை கலைஞர்.

 

தற்போது உள்ள இயக்குநர்கள் ஒரு வருடத்திற்கு 1 படம் தான் எடுக்கிறார்கள். ஆனால், மணிவண்ணன் ஒரே சமயத்தில் நான்கு படம் வரை இயக்கியுள்ளார். உதாரணமாக, பாலைவன ரோஜாக்கள் இயக்கும் போதே திருப்பூர் மணி 'விடிஞ்சா கல்யாணம்' படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அப்போது மணிவண்ணன் கதையை யோசிக்கக் கூடவில்லை. இருந்தும், தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரம் படப்பிடிப்பு வைக்க சம்மதித்து விட்டார். நான் மணிவண்ணனிடம் கேட்டேன், கதையே இன்னும் தயாராகவில்லையே என. அவர் சொன்னார், ‘அதெல்லாம் பாத்துக்கலாம் ஒரு வாரம் இருக்கே’ என சொல்லிவிட்டார். பிறகு மணிவண்ணன், 'யோ என்னையா கதை வந்தா சொல்லமாட்டோமா' என நகைச்சுவையாக நக்கலடித்தார். பின்பு, குடும்பப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சுஜாதவை கொலையாளியாக சித்தரித்து ஒரு படம் எடுப்போம் எனத் தீர்மானித்து. அடுத்த நாள் கதை பற்றி பேசுவதற்கு விஜிபி கடற்கரை சென்றுவிட்டோம்.

 

அங்கு உரையாடும் போது சொன்னேன், சிவாஜி நடித்த புதிய பறவை, ஒரு ஆங்கில நாவலை தழுவி மாற்றி எடுத்தார்கள். நாம் புதிய பறவையை மாற்றி எடுப்போம் என்றேன். எனவே, படத்தின் முதல்பாதியை மதிய உணவு நேரத்திற்கு முன்பே தயார்செய்து விட்டார் மணிவண்ணன். அடுத்து இரண்டாம் பாதி வீடு திரும்புவதற்குள் முடித்துவிட்டார். பின்னர், இந்த கதையை தயாரிப்பாளரிடம் 'விடிஞ்சா கல்யாணம் அதற்குள் குடும்பத்தில் ஆயிரத்து எட்டு சிக்கல்' என சொல்லி படத்தை எடுத்தோம். இதனையடுத்து பாலைவன ரோஜாக்களும், விடிஞ்சா கல்யாணம் படமும் ஒரே நாளில் வெளிவந்து நூறு நாள் ஓடியது. இதுபோன்று சிவாஜிக்கும் விஜயகாந்துக்கும் படங்கள் ஓடியுள்ளது. ஆனால், ஒரே இயக்குநர், ஒரே கதாநாயகன் என்ற முறையில் என்னுடையது முதல் வெற்றி. விடிஞ்சா கல்யாணம் படத்திற்கு இளையராஜா பாடல்கள் அமைத்தாலும், ரீ-ரெகார்டிங் எம்.எஸ்.வி தான். அவரைப் போன்று தன்மையான நபரை பார்த்ததில்லை நான். ஏனென்றால் அத்துனை பெரிய இசையமைப்பாளர், ஜீவ பாரதியிடம் இசைத்துவிட்டு நன்றாக இருக்கிறதா என கேட்டார். இது போன்று ஆர்.சுந்தரராஜன் அவருக்கும் நடந்ததுள்ளது.

 

பின்னர், முதல் வசந்தம் படத்தின் 50வது நாள் விழாவில், ஜீவ பாரதி நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து பின் செல்வார். அதேபோன்ற காட்சியைத் தான் அமைதிப்படையில் பயன்படுத்தி இருப்போம். அந்த காலத்தில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போதே நினைத்துக் கொள்வேன், 'நாம் சினிமாவில் வளர்ந்துவிட்டால் பெரிய நடிகர்கள் மத்தியில் சிகெரட் பிடிப்பது திமிராகத் தெரியும். அதனால, இப்பவே பிடிச்சிப்போம்' என்று எண்ணுவேன். தொடர்ந்து, வியாசர்பாடியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு என்னை அழைத்து சென்றார்கள். அதில், நான் பேசும்போது, 'கம்யூனிஸ்டுகள் தான் நிஜ ஹீரோ' என பேசினேன். அதற்கு காரணம், நாங்கள் எல்லாம் ஒரு வழக்கு பாய்ந்தாலே ஓடிவிடுவோம். ஆனால் இவர்கள் வழக்குகளுக்கு நடுவே படுத்து தூங்குகிறவர்கள். 

 

இப்படி ஒரு நாள் மணிவண்ணன் சுவற்றில், கம்யூனிஸ்ட் சின்னத்தை சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில் வரைந்து கொண்டிருந்தார். உடன் தோழர் கல்யாண சுந்தரமும் இருந்தார். இப்படியும் மணிவண்ணன் இருந்துள்ளார். இவருக்கும் மற்ற இயக்குநருக்கும் உள்ள வித்தியாசம், 'பிறர் எழுதியதை எடுப்பார்கள். மணிவண்ணன் எடுத்ததை எழுதுவார்...'. இதனை மனோரமா ஒரு முறை நினைவுபடுத்தி கூறியுள்ளார். அந்தளவு மணிவண்ணன் வசனங்களை எழுதுவதில் வல்லவர். இப்படியாக, பாலைவனச் சோலை படத்தின் வசனத்தை கலைஞர் தான் எழுதினார். ஆனால், அதனை நாங்கள் டிரென்டுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினோம். அப்போது, தயாரிப்பாளர் முரசொலி மாறன் எங்களிடம், 'கலைஞரின் ஒரு வசனத்தையாவது வைப்பீங்களா' எனக் கேட்டுவிட்டார். இருந்தும் கலைஞர் சொல்ல வந்ததைத் தான் மணிவண்ணன் தற்கால சூழலுக்கு தகவமைத்து எழுதியிருப்பார். தொடர்ந்து நான், சத்யா மூவிஸ் நிறுவனத்தில் நடித்து வந்ததால் மற்றொரு படமும் என்னை வைத்து எடுக்க திட்டமிட்டனர். அப்போது மணிவண்ணனை இயக்குநராக வைத்து படம் எடுக்கலாம் என்றேன். ஆனால், ஆர்.எம். வீரப்பன் கொஞ்சம் எடிட்டிங் வேலைகளிலும் ஈடுபடுவார் என்பதனை மணிவண்ணனிடம் சொன்னேன். அவர், 'அட விடுப்பா.... கலைஞரையே ஏமாத்திட்டோம்' என நக்கலடித்தார். இன்னும் இந்த புத்தகத்தை பற்றி நிறைய பேசிக்கொண்டு போகலாம். இதில் இருக்கும் நெருக்கமான சில பகுதிகளுக்கு நான் செல்ல வேண்டாம் என்று தான் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பேசுகிறேன்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான்கான் படத்தில் இணைந்த தமிழ் நடிகர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
sathyaraj joined in Salman Khan's film

ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம், சிவகார்த்திகேயனின் 23வது படமாகும். இப்படத்தில், அனிருத் இசையமைக்க, ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில்,இப்படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார். 

சிவகார்த்திகேயன் படத்தையடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுத்து வருகிறார். ‘சிக்கந்தர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. ராஷ்மிகா மந்தனா சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பாலிவுட்டில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்திற்கான புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சத்யராஜை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிகந்தர் குழுவில் நீங்கள் இருப்பதில் பெருமை அடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் பிரதீக் பாப்பர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம், பாலிவுட்டில் சத்யராஜ் நான்காவது படத்தில் நடிக்கிறார். 

Next Story

இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (வயது 91) காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இரா.சம்பந்தன் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

2015ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது’ என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு 13ஆவது முறையாகத் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தனும், ‘இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.