
மனதின் மையம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ், "நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை. டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது ரொம்ப முக்கியம்" என பேசினார்.
பின்பு தொடர்ந்து செய்தியாளர்களின் பேசிய சத்யராஜ், "ஊடகங்கள் மீது எனக்கு பெரிய வருத்தம் இதுதான். ஏங்க எங்களை தலையில தூக்கிவச்சிக்கிட்டு கொண்டாடுறிங்க. நாங்க சும்மா நடிக்கிறோம். ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் என்றால் நடிப்போம். எங்களுக்கு சோறு போடுங்க தலையில தூக்கி வச்சி கொண்டாடாதீங்க. நாங்க யாரும் பெரியாரோ, மார்க்ஸோ, அம்பேத்கரோ... அல்லது மாபெரும் அறிஞரோ இல்லை" என காட்டமாக பேசியுள்ளார்.