Skip to main content

"மேலோட்டமா பாத்தா ஆபத்துகள் தெரியாது" - சத்யராஜ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
sathyaraj speech in dmk stage

தி.மு.க சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா - சுய மரியாதைச் சுடர் திராவிட இனமானத் தொடர்’ எனும் தலைப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “பா. விஜய் பேசுனதில் ரொம்ப முக்கியமான விஷயம். வட நாட்டிலிருந்து மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வரலாம்னு பார்க்குது. அதை விட்ராதீங்க என பேசினார். அதை விடமாட்டோம். ஏன்னா, தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். வட நாட்டு காரவங்களுக்கு தான் அது மதப்புயல். இங்க இருக்கிறவங்களுக்கு அது மடப்புயல். இங்க இருக்கிற எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பி போல பழகிட்டு வரோம். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும் மற்றவர்களோடு ஒன்னு மண்ணா தான பழகிட்டு இருக்கோம். இப்படி இருக்கும் போது இங்க மதத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது.  

எல்லாருமே ஒற்றுமையா இருக்கிறோம். இது எப்படி பண்ண முடியும். இது நீதி கட்சியினுடைய நீட்சி தான் என தோழர் அருள்மொழி சொன்னாங்க. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து பள்ளிகூடத்தை ராஜாஜி மூடினார். மூடுவதற்கு முன்னாடி யார் திறந்தாங்க என்பதை அருமையாக சொன்னாங்க, நீதி கட்சி திறந்து வத்த பள்ளி அது. நீட் தேர்வுக்கு முன்னாடியே பெரிய கேட் அந்த காலத்தில் போட்டிருக்காங்க. அது சரியா தவறா என தெரியவில்லை. நீதி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, மெடிக்கல் காலேஜ் சேருவதற்கு சான்ஸ்கிரிட் தெரிஞ்சிருக்கனும். இதை விட சூப்பர் காமெடி யாருமே பண்ண முடியாது. மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்மந்தம். அப்படி ஒரு திட்டம் வைத்தால் தான் நம்ம புள்ளைங்கெல்லாம் சேர முடியாது. இப்போ அதே திட்டத்தை நீட் என கொண்டு வராங்க. நம்மளை படிக்க விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு எதையோ பண்றாங்க. ஆனா நம்ப படிச்சிகிட்டே இருக்கோம். இன்னைக்கு எல்லா இடத்துலையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்க பெரியளவில வந்துட்டாங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை” என்றார். 

மேலும் “பாம்பேவுக்கு ஷூட்டிங்கிற்காக இப்போது போனேன். அங்கு பீப் ஸ்டாலே கிடையாது. அப்போ... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது நான் தானே, நீ எப்படி முடிவெடுக்கலாம். இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. இங்க இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், ஜாதியை சேர்ந்தவர்களும் ரொம்ப ஒத்துமையா இருக்கோம். அது சீர்குலைந்து போகக் கூடாது. நாம் முன்னோக்கி தான் போகணும்” என்றார். 

சார்ந்த செய்திகள்