பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சத்யராஜ், சினிமாவுக்கு நடிக்க போகும்போது தன்னை டிஸ்கரேஜ் செய்ததும் சொந்த சாதிக்காரன் தான் என சொன்னார். அவர் பேசியதாவது, “எனக்கு பகுத்தறிவு சிந்தனை வந்தது எம்.ஜி.ஆர். படங்களை பார்த்துதான். ஒரு படத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்வதற்காக நாலு ரவுடி துறத்துவார்கள். அவர்களை எம்.ஜி.ஆர். அடித்து தடுப்பார். உடனே அந்த பெண், அண்ணா சரியான நேரமா பார்த்து ஆண்டவன் உங்களை அனுப்பிவிட்டாருன்னு சொல்வாங்க. அதுக்கு எம்.ஜி.ஆர், என்னை அனுப்புனது ஆண்டவன்னா, இதுக்கு முன்னாடி வந்த நாலு ரவுடியை அனுப்புனது யார்? எனக் கேட்பார். அதுதான் எனக்கு முதலில் வந்த பகுத்தறிவு சிந்தனை. அப்போது நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன், 15 வயது.
சாதி எந்த வகையிலும் நமக்கு உதவாது. நான் இங்கு நிற்பதுக்கு காரணம் சாதி கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசனும், லூமியர் பிரதர்ஸும் தான். தாமஸ் ஆல்வா எடிசன் கரண்டை கண்டுபிடிச்சார். லூமியர் பிர்தர்ஸ் சினிமாவை கண்டுபிடிச்சாங்க. என்னை டிஸ்கரேஜ் செய்ததும் என் சாதிக்காரன் தான். நான் சொந்தக்கார பொண்ணைத் தான் லவ் பன்னேன். ஆனால் நாங்க மாடி வீட்டு ஏழை ஆனதும் எங்களை கழட்டி விட்டுட்டாங்க. மாடி வீட்டு ஏழைன்னா, கார் இருக்கும் பெட்ரோல் போட முடியாது, ஃபேன் இருக்கும் ஓடாது... அதுமாதிரி. அதனால் சாதி எனக்கு உதவி பண்ணல.
பின்பு நான் பி.ஏ.பாட்டனி படிச்சேன். அந்த படிப்புக்கு அப்போது வேலை கிடைக்காது. என்ன பன்லாம்னு யோசிச்சப்போ நடிகர் சிவக்குமார் பழக்கமானார். நான் மிமிக்ரி பன்னுவதால் சினிமா வாய்ப்பு தேடி போனேன். அப்போதும் கூட சொந்த சாதிக்காரன் தான் டிஸ்கரேஜ் பண்ணான். எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தவர் டைரக்டர் டி.என்.பாலு. அவர் என்ன சாதின்னு எனக்கு தெரியாது. டான்ஸே வராத எனக்கு பாட்டு போட்டு ஹிட் கொடுத்த இளையராஜா என் சாதிக்காரர் கிடையாது. அதுக்கப்புறம் எனக்கு வெற்றி கொடுத்த தேவாவும் என் சாதிக்காரர் கிடையாது. என் கூட ஜோடியாக நடிச்சவங்களும் என் சாதிக் கிடையாது. அதனால் சாதியால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றார்.