Skip to main content

“அவர் கண்கள் கொஞ்சமாகக் கலங்கியிருந்தன...”- பாலுமகேந்திரா குறித்து சத்யராஜ்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020
sathyaraj


இயக்குனர் பாலுமகேந்திரா தமிழ் திரையுலகின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இன்று (20 மே) அவரது பிறந்தநாள். அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நடித்துள்ளனர். கமல் நடித்த 'மூன்றாம் பிறை' மிகப்பெரிய வெற்றியையும் பெற்று கமலுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஆனால், ரஜினி நடித்த 'உன் கண்ணில் நீர் வடிந்தால்' தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்கும் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிக்க ஆசை இருந்தது. அதில் சத்யராஜும் ஒருவர். சத்யராஜ், பாலு மகேந்திரா குறித்த தனது நினைவுகளை, முன்பு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...

"நான் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. 'உறங்காத நினைவுகள்' என்ற படத்தில் அவரது ஒளிப்பதிவில் நடித்தேன். அதில் சிவக்குமார் அண்ணன்தான் ஹீரோ. பாலுமகேந்திரா குறித்து அவரிடம் பணியாற்றியவர்கள் சொல்வார்கள், 'எல்லா பிள்ளைகளையும் வாழவைத்தவர் அவர்' என்று. அவரது பிள்ளைகளை மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த என் போன்றவரையும் வாழ வைத்தவர். அவரது படங்களைப் பார்த்து நடிப்பை கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.

இதெல்லாம் நடித்து பல ஆண்டுகள் கழித்து நான் 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக வி.ஜி.பிக்கு போயிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்போது, பாலுமகேந்திரா சார் போன் பண்ணார். 'சத்யராஜ் நாம ஒரு படம் பண்ணணுமே'னு சொன்னார். 'சார், வண்டியிலதான் இருக்கேன். அப்படியே உங்க ஆபீஸ்க்கு வந்துடவா?'னு கேட்டேன். 'இல்ல, இல்ல, அவ்வளவு அவசரமா இல்ல. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்றேன்'னு சொன்னார். ஆனால், அந்தப் படமும் நிகழவில்லை.

இப்படி, பாலுமகேந்திரா சார் முன்னாடி நடிச்சு பாராட்டு வாங்கணும் என்ற என் ஆசை நிறைவேறாமையே இருந்தது. நண்பர் தங்கர் பச்சான் மூலம் அது நிகழ்ந்தது. அவர் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் 'மாதவ படையாச்சி' என்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தப் படத்தை பாலு மகேந்திரா சாரை அழைத்து திரையிட்டார். படம் பார்த்த பாலு மகேந்திரா சார், என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். அவர் என்னை அணைத்த போது நான் கவனித்தேன். அவர் கண்கள் கொஞ்சமாகக் கலங்கியிருந்தன. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 'கடலோர கவிதைகள்' பாத்துட்டு சிவாஜி கணேசன் சாரும் 'வேதம் புதிது' பாத்துட்டு வாத்தியார் எம்.ஜி.ஆரும் பாராட்டுனாங்க. அந்த சந்தோஷம் பாலுமகேந்திரா பாராட்டுனப்போ கிடைச்சது."     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மேலோட்டமா பாத்தா ஆபத்துகள் தெரியாது" - சத்யராஜ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
sathyaraj speech in dmk stage

தி.மு.க சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா - சுய மரியாதைச் சுடர் திராவிட இனமானத் தொடர்’ எனும் தலைப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “பா. விஜய் பேசுனதில் ரொம்ப முக்கியமான விஷயம். வட நாட்டிலிருந்து மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வரலாம்னு பார்க்குது. அதை விட்ராதீங்க என பேசினார். அதை விடமாட்டோம். ஏன்னா, தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். வட நாட்டு காரவங்களுக்கு தான் அது மதப்புயல். இங்க இருக்கிறவங்களுக்கு அது மடப்புயல். இங்க இருக்கிற எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பி போல பழகிட்டு வரோம். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும் மற்றவர்களோடு ஒன்னு மண்ணா தான பழகிட்டு இருக்கோம். இப்படி இருக்கும் போது இங்க மதத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது.  

எல்லாருமே ஒற்றுமையா இருக்கிறோம். இது எப்படி பண்ண முடியும். இது நீதி கட்சியினுடைய நீட்சி தான் என தோழர் அருள்மொழி சொன்னாங்க. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து பள்ளிகூடத்தை ராஜாஜி மூடினார். மூடுவதற்கு முன்னாடி யார் திறந்தாங்க என்பதை அருமையாக சொன்னாங்க, நீதி கட்சி திறந்து வத்த பள்ளி அது. நீட் தேர்வுக்கு முன்னாடியே பெரிய கேட் அந்த காலத்தில் போட்டிருக்காங்க. அது சரியா தவறா என தெரியவில்லை. நீதி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, மெடிக்கல் காலேஜ் சேருவதற்கு சான்ஸ்கிரிட் தெரிஞ்சிருக்கனும். இதை விட சூப்பர் காமெடி யாருமே பண்ண முடியாது. மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்மந்தம். அப்படி ஒரு திட்டம் வைத்தால் தான் நம்ம புள்ளைங்கெல்லாம் சேர முடியாது. இப்போ அதே திட்டத்தை நீட் என கொண்டு வராங்க. நம்மளை படிக்க விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு எதையோ பண்றாங்க. ஆனா நம்ப படிச்சிகிட்டே இருக்கோம். இன்னைக்கு எல்லா இடத்துலையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்க பெரியளவில வந்துட்டாங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை” என்றார். 

மேலும் “பாம்பேவுக்கு ஷூட்டிங்கிற்காக இப்போது போனேன். அங்கு பீப் ஸ்டாலே கிடையாது. அப்போ... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது நான் தானே, நீ எப்படி முடிவெடுக்கலாம். இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. இங்க இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், ஜாதியை சேர்ந்தவர்களும் ரொம்ப ஒத்துமையா இருக்கோம். அது சீர்குலைந்து போகக் கூடாது. நாம் முன்னோக்கி தான் போகணும்” என்றார். 

Next Story

“என் கொள்கைகளை பேசும் படமாக அமைந்தது” - சத்யராஜ்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

sathyaraj speech in valli mayil audio launch

 

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்’. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தாய் சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 80களின் நாடகக்கலை பின்னணியில்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இவ்விழாவினில் சுசீந்திரன் பேசியதாவது, “நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7  வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர். அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.

 

விஜய் ஆண்டனி பேசுகையில், “சுசீந்திரன் சார் உடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்த படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் நான் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

 

சத்யராஜ் பேசுகையில், “நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி.  இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்” என்றார்.