ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம், சிவகார்த்திகேயனின் 23வது படமாகும். இப்படத்தில், அனிருத் இசையமைக்க, ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில்,இப்படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் படத்தையடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுத்து வருகிறார். ‘சிக்கந்தர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. ராஷ்மிகா மந்தனா சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பாலிவுட்டில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்கான புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சத்யராஜை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிகந்தர் குழுவில் நீங்கள் இருப்பதில் பெருமை அடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் பிரதீக் பாப்பர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம், பாலிவுட்டில் சத்யராஜ் நான்காவது படத்தில் நடிக்கிறார்.