தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் கலைஞர் -பத்மாவதி தம்பதிக்கு மூத்த மகனாக 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்தார். பின்பு நடிகராக அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடகராகவும் வலம் வந்துள்ளார். இவர் மறைந்த செய்தி கலைஞர் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் மு.க.முத்து மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர். மு.க.முத்துவின் உடலை கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என மு.க.முத்துவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்த நிலையில் அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், “மு.க முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை படத்தை கோயம்புத்தூரில் முதல் நாள் போய் பார்த்தேன். அதுக்கப்புறம் அவர் எனக்கு நல்ல பழக்கம். நான் காலேஜ் படிச்சுகிட்டு இருக்கும் போது, காலேஜுக்கு எதிர்புறத்தில் இருந்த ஹோட்டலில் தான் அவர் ஒரு முறை தங்கியிருந்தார். அப்போது அவரிடம் நான் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். அதெல்லாம் எனக்கு பசுமையான நினைவுகளாக இருக்கிறது” என்றார்.