Skip to main content

“மச்சான்... நீ மோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் டா...” - சத்யராஜ் பகிர்ந்த கதை

 

sathyaraj about amit sha in manivannan book release fuction

 

எழுத்தாளர்  ஜீவ பாரதியின், 'இயக்குநர் மணிவண்ணனும் நானும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சத்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார். 

 

பின்பு மேடையில் பேசிய சத்யராஜ், "செங்குட்டுவனை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு சந்தித்து பேசும்போது சொன்னார், 'மணிவண்ணன் அண்ணன் இருந்திருந்தால், அவர் அமித்ஷாவாகவும், நான்(சத்யராஜ்) மோடியாகவும் நடித்திருப்போம் என'. மேலும், செங்குட்டுவன் இதனை கதையாகவும் உருவாக்கி வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு, சனாதனம் என தலைப்பும் வைத்துள்ளார். ஆனால், இவர் இப்படி சொல்வதற்கு முன்பே, நான் பெரியார் படத்தின் வைக்கம் போராட்டம் காட்சியை எடுக்க கேரளா சென்றேன். அப்போது, என் நெருங்கிய நண்பன் நிழல்கள் ரவி வேறொரு பட ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு நாள், ஒரே காரவனில் நான், நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

 

திடீரென, நிழல்கள் ரவி என்னிடம், 'மச்சான்... நீ மோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் டா' என சொல்ல 'டேய் சும்மா இருடா' என நான் தமாசாக சொன்னேன். ஆனால், மோடி, அப்போது குஜராத்தில் முதலமைச்சராகத் தான் இருந்தார். எனவே, செங்குட்டுவனுக்கு முன்பே நிழல்கள் ரவி இதனை சொல்லிவிட்டார். ஆகையால், ஒரு நடிகனுக்கு பல முகங்கள் தெரிவது சிறப்புதான். இதில் கொள்கை, சித்தாந்தங்களை எல்லாம் தவிர்த்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் கூட ஒரு இந்தி பட வாய்ப்பு வந்தது. அதில் சாய்பாபா கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்கள். நான் சொன்னேன், 'நான் பழுத்த நாத்திகன். படம் நடித்துவிட்ட அடுத்த நாள் மேடையில் ஏறி கடவுள் இல்லை என பேசுவேன். எனவே இது உங்களுக்குத்தான் பாதிப்பா இருக்கும். நல்லா யோசிங்க' என்றேன். உதாரணத்திற்கு, கொள்கை ரீதியாக அணுகினால், பாகுபலி காலைத் தூக்கித்தான் கட்டப்பா தலையில் வைப்பாரே தவிர பிரபாஸ் காலைத் தூக்கி சத்தியராஜ் தலையில் வைக்கமாட்டார். 

 

சிவாஜி கூட கதாபாத்திரத்திற்காக, சிவக்குமார் அவரின் கால் கட்டை விரலை எடுத்துக் கடிக்கும் காட்சியில் நடித்திருப்பார். எனவே, நடிப்பிற்காக என்ன வேண்டுமானால் முயற்சிக்கலாம் என நடிகர் திலகம் சொல்லித்தந்து சென்றிருக்கிறார். நான் பொதுவாகவே புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை படிக்காமல் கதை அளக்கும் பழக்கம் உண்டு. ஆனால், இந்த முறை முழுவதையும் படித்துவிட்டு குறிப்புகளுடன் வந்திருக்கிறேன். இதேபோல, சத்யா மூவிஸ் ராமவீரப்பன் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கோவையில் வெளியிட்டார். அந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தான், அவர் எந்த புத்தகத்தை வெளியிட்டாலும் அதனை முழுதாகப் படித்துவிடுவார். 

 

ஆனால், நான் வாசித்துவிட்டு செல்லவில்லை. ஏனென்றால், நம்ம சத்யா மூவீஸ் வீரப்பன் தானே  நெருங்கியவர் தானே என்று சென்றுவிட்டேன். அதற்கு காரணம், அவர் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளேன் என்றதால் வாசிக்காமல் வந்து பேசிவிடலாம் என்ற தைரியத்தில் வந்தேன். அந்த நிகழ்வில் நான் நடித்த தெய்வத் தாய் முதல் மந்திரப் புன்னகை படம் வரை பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டு மேடையில் அமர்ந்தேன். பக்கத்தில் இருந்த கிருஷ்ணராஜ் கேட்டார், 'புத்தகத்தை திறந்தே பார்க்கவில்லை போல' என கேட்டுவிட்டார். தொடர்ந்து, நீங்க ராமவீரப்பன் வரலாறை பேசாமல் உங்கள் அனுபவத்தை பேசியிருக்கிறீர்கள் எனவும் கேட்டுவிட்டார். இதனை ராமவீரப்பனும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

ஆனால், இந்த நிகழ்ச்சியில் வாசிக்காமல் வரமுடியாது. அதனால் குறிப்பு எழுதி வந்துள்ளேன். ஏனென்றால், எழுத்தாளர் ஜீவ பாரதி சற்று கோபக்காரர். பொதுவாகவே எனக்கு சில வித்தியாசமான வார்த்தைகளை வாசிக்கப் பிடிக்கும். என்னிடம் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழர் சாரு மஜூம்தார் புத்தகத்தை கொடுத்தார். அதன் பிறகு இந்த மணிவண்ணனும் நானும் புத்தகத்தில் தான் அந்த வார்த்தையை படிக்கிறோம். அன்று ஒரு இரவில் மணிவண்ணன் என்னிடம், 'சிலந்தியை விட ஒரு ஈ வலிமையில் குறைந்தது தான். அந்த ஈ சிலந்தி வலையில் சென்றால் அகப்பட்டு விடும். ஆனால், ஆயிரம் ஈக்கள் ஒன்று சேர்ந்தால் சிலந்தி வலை தகர்ந்து விடும்’ என மார்க்ஸ் சொன்னதை என்னிடம் சொன்னார். இன்று வரை அவர் கூறியது பசுமையாக மனதில் இருக்கிறது. நிகழ்வில் உதவி இயக்குநர் சினிமா ஆசை பற்றி ராசி அழகப்பன் நன்றாக பேசியிருந்தார். அவர் கூறிய கருத்து தான் எனது கருத்தும். 

 

என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு, சினிமாவிற்கு வரவேண்டும். அதற்கு உங்க அறிவுரை என்னவாக இருக்கும் என. நான் சொல்வேன், 'வராதீங்க' என்று. இதனை சிவக்குமார் என்னிடம் அறிவுறுத்தினார். காரணம் சினிமா மிகவும் சிக்கல் நிறைந்த விஷயம். பிற துறைகளில், ஒரு முறை மருத்துவம் படித்தால் மருத்துவர் ஆகிவிடலாம். அதேபோல பி.எ., பி.எல் படித்தால் வழக்கறிஞர் ஆகிவிடலாம். மாறாக, சினிமாவில் நீங்கள் தினம் தினம் வெற்றியை தர வேண்டும். ஆதலால், அந்த காலத்தில் கொடுத்த ஹிட்களை பேசுவதில் பயனில்லை. இந்த நிகழ் காலத்தில் என்ன செய்கிறோம் என்பது தான் சினிமா. இதற்கிடையில், பழைய நண்பர்கள் கலை, சங்கர் போன்றோரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

 

இந்த பழையகால நண்பர்கள் ஒன்று சேருவதே பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். ஏனெனில், எனக்கு தற்போது 69 வயதாகிறது. சமீபத்தில் நான் என்னுடன் 10வது படித்த நண்பர்களை சந்திக்கச் சென்றேன். வெளியுலகிற்கு நான் நடிகன் என்று தெரியும். ஆனால், நண்பர்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை. அந்த மாதிரியெல்லாம் இந்த நிகழ்வில் நடைபெறாமல், அனைவரும் தெரிந்தவர்கள் போலவே உள்ளனர். தொடர்ந்து தொடர்பில் இருந்தால் நினைவில் வைத்துக் கொள்ளலாம். தற்போது வாட்சாப் வந்தது மிகுந்த உதவியாய் இருக்கிறது. எனவே, சினிமாவிற்கு வர விரும்புவோர் நிரந்தர வருமானம் இருந்தால் வரலாம். மாறாக சினிமா வருமானத்தை நம்பிக்கொண்டு தயவுகூர்ந்து வர வேண்டாம். திரைப்படப் பாடல்களில் வருவது போல ஒரே பாடலில் முன்னேறி விட முடியாது. இதனை பலமுறை சிவக்குமார் என்னிடம் கூறியிருக்கிறார். இதுபோன்று நானும் சிவக்குமாரும் சின்ன தம்பி பெரிய தம்பி படப்பிடிப்பு முடிந்து நீலகிரி ரயில் நிலையம் சென்றோம். சிவக்குமார் ரயில் வரும் முன்பே வந்துவிடுவார். அவர் ரயில் நிலையம் வந்தபோது இருந்த மக்கள் பரபரப்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். கடைசியில், 'அந்தப் பக்கம் சிவக்குமார் இருக்கிறார் பா' என்ற நிலைக்கு மாறும். இதே பழக்கம் தான் அவர் படப்பிடிப்பிலும் கடைபிடிப்பார். இந்த பழக்கத்தை சிவாஜியிடம் இருந்து சிவக்குமார் கற்றுக்கொள்ள அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.