sasikumar speech at tourist family success meet

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரஜினி, சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து எழும் பாராட்டால், படத்திற்கு கூடுதல் காட்சிகளும் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் சசிகுமார் பேசுகையில், “படம் பார்த்துவிட்டு நான் சம்பளம் ஏற்றிவிடுவதாக சில பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்கள். நிச்சயம் கிடையாது. சம்பளத்தை ஏற்ற மாட்டேன். அதை நான் உறுதியளிக்கிறேன். எனக்கு பல வருஷம் கழித்து இவ்வளவு பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. தயாரிப்பாளரின் வெற்றியாகவும் நினைக்கவில்லை. புது இயக்குநர்களுக்கும் தோல்வியடைந்த இயக்குநர்களுக்கும் நம்பிக்கை கொடுத்திருப்பதாக பார்க்கிறேன். பொறுமையாக காத்திருந்து அதற்கான முயற்சியில் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும். இன்னொன்று, தோல்வி வந்தால் அதை ஒத்துக் கொள்ள வேண்டும். நான் தோல்வியடைஞ்சிருக்கேன். அதை ஒவ்வொரு முறையும் ஒத்துக் கொண்டுள்ளேன்.

Advertisment

இப்படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எல்லாருக்கும் தெரியும். உண்மையை பேசுவோம். முதலில் நடிகர்களுக்கு உண்மையை சொல்லுங்கள். அதை தெரிந்து கொண்டால் தான் யாரும் சம்பளத்தை ஏற்ற மாட்டார்கள். இந்த படம் மூலம் என் படத்தின் மார்கெட்டை தெரிந்து கொண்டேன். என்னுடைய கரியரில் அதிக வசூல் செய்த படம் இந்த படம் தான். இதற்கு முன்னாடி குட்டிப்புலியும் சுந்தர பாண்டியனும் இருந்தது. அதை இந்த படம் முறியடிச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை ஏன் சொல்கிறேன் என்றால். என்றைக்கும் விடாமுயற்சியுடன் விட்டுக்கொடுக்காமல் உழைத்தால் வெற்றி கிடைக்கும். அந்த நம்பிக்கையை இதன் மூலம் சொல்கிறேன்” என்றார்.