Skip to main content

சுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

subramaniyapuram team

 

2008ஆம் ஆண்டு, இதே ஜூலை 4ஆம் நாள் 'சுப்ரமணியபுரம்' வெளியானபோது, இந்தப் படம் காலாகாலத்துக்கும் பேசப்படும் படமாக அமையப்போகிறது என்பது படம் பார்க்க வந்த பெரும்பாலானோருக்குத் தெரியாது. வெளியான காலத்துக்கு சற்றே முன்பு நிலவிய நான்கு நண்பர்கள் - ஒரு ஹீரோயின் - காமெடி - காதல் கதை என்றே பலரும் நினைத்தனர். அப்படிப்பட்ட எண்ணத்துடன் சென்று படம் பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, இன்ப அதிர்ச்சி. 80கள் காலகட்டத்தை அப்படியே கொண்டுவந்தது, கொண்டாட்டமான நட்பு, அழகான காதல், அதிர வைக்கும் துரோகம், உறைய வைக்கும் வன்முறை என படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தது. அந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. 12 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியாத அந்தப் படம் குறித்த மறக்க முடியாத, சுவாரசியமான 12 விஷயங்கள்...

 

- சசிக்குமார், பாலா - அமீர் பட்டறையிலிருந்து சூடாகக் கூர் தீட்டப்பட்டு வந்திருந்தார். தமிழ் சினிமாவில் 'துரோகம்' என்ற விஷயம் சற்று குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் காதலுக்குள் துரோகம் என்பது அப்போது மிக அரிது. 80களில் நடக்கும் இப்படி ஒரு சீரியஸ் கதை என்பதை ஒரு முதல் பட இயக்குனரிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனை இத்தனை நேர்த்தியாகப் படைத்து திரையுலகத்தை திரும்பிப்பார்க்க வைத்தார் சசிக்குமார். அதன் பிறகு 'ஈசன்' மட்டுமே இயக்கிய சசிக்குமார் ஹீரோவானதில் ஒரு நல்ல இயக்குனரை நாம் மிஸ் செய்திருக்கிறோம்.

 

- படத்தின் பாடல்கள் அத்தனையுமே மிகப்பெரிய ஹிட். 'கண்கள் இரண்டால்' பாடல் காதல் தேசத்தின் கீதமாக, காலர் ட்யூனாக, ரிங்டோனாக எங்கும் ஒலித்தது. 'கண்கள் இரண்டால்' ஒரு பக்கமென்றால் சுப்ரமணியபுரம் மூலமாக இன்னொரு பாடலும் பெரும் புகழைப் பெற்றது. அது 'சிறு பொன்மணி அசையும்...' பாடல். ஜெய், ஸ்வாதியை  பின்தொடர்ந்து காதல் செய்யும் ஆரம்பகட்ட காட்சிகளில் ஒலிக்கும் அந்தப் பாடல் 'கல்லுக்குள் ஈரம்' என்ற 1980ஆம் வருட படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல். 'சுப்ரமணியபுரம்' படத்தில் அந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம் இளைஞர்கள் குதூகலித்தனர்.

 

jey swathi love



- சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சசிக்குமாரின் பள்ளி ஆசிரியர். கொடைக்கானலில் சசிக்குமார் படித்த செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் இசை ஆசிரியர் ஜேம்ஸ். அப்போதே சசிக்குமாருக்கு சினிமாவின் மேல் பெரும் ஈர்ப்பாம். பின்னாளில் தான் படம் இயக்கியபோது தன் ஆசிரியரையே இசையமைப்பாளராக்கினார். ஜேம்ஸ் வசந்தன், அதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறியப்பட்டிருந்தார். இசையில், அனைத்து பாடல்களும் ஹிட்டாகும்படியான ஒரு சிறந்த ஆல்பத்தை தன் மாணவனுக்கு உருவாக்கியளித்திருந்தார்.

 

- படத்தின் கதை மதுரையில் நிகழ்வதாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டன. பழமை மாறாத தெருக்களும், வீடுகளும் திண்டுக்கல்லில் அமைந்தன. படப்பிடிப்பு நடந்தபோது இப்படி ஒரு மிக முக்கியமான வெற்றிப்படம் தங்கள் பகுதிகளில் உருவாக்கப்படுகிறது என திண்டுக்கல் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நடித்தவர்கள், குழுவினர் என அனைவரும் புதியவர்களாகவும் பெரிய புகழ் பெறாதவர்களுமாக இருந்தனர். கதை நடக்கும் இடமான மதுரையில்  இப்படம் 'தங்கரீகல்' என்ற பழமை வாய்ந்த திரையரங்கில் வெளியானது. அதுவரை 'A' சான்றிதழ் படங்களாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் அந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு சுப்ரமணியபுரம் வெளியாகி பத்து வாரங்களுக்கு மேல் கொண்டாட்டமாக ஓடியது.

 

- சமுத்திரக்கனி, படத்தின் முக்கிய பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த பாத்திரம் கொல்லப்படும் காட்சியில் ரசிகர்களின் குரலால் அரங்கம் அதிர்ந்தது. அந்த வெறுப்பு, சமுத்திரக்கனியின் நடிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது. சின்னத்திரையில் பிஸி இயக்குனராகத் திகழ்ந்த சமுத்திரக்கனி சினிமா முயற்சிக்காக சின்னத்திரையை துறந்து வாய்ப்புகள் தேடிக் காத்திருந்த காலத்தில், அவரை சசிக்குமார் அழைத்து நடிக்கவைத்தார். அதன் பின் சசிக்குமார் - சமுத்திரக்கனி கூட்டணியின் நட்பு புகழ் பெற்றது. ரஜினி படம், ராஜமௌலி படம் என இன்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே நடித்து முக்கிய நடிகராக வளம் வருகிறார் சமுத்திரக்கனி.

 

samuthirakani


 
- 'நாங்களும் செகப்பா தானடா இருக்கோம்', 'பரமா... சாவு பயத்த காட்டிட்டாய்ங்க பரமா', 'உங்க பூசாரித்தனமும் வேண்டாம் பொங்க சோறும் வேண்டாம்', 'கேக்குது கேக்குது மைக்செட் சத்தம்...', 'சுத்தபத்தமாதான இருக்க', 'பூட்டியிருந்த வீட்டுல சவுண்ட குடுத்துட்டு வர்றான்', 'நல்லாத்தானடா இருந்தோம்...' என இன்றும் ரசிக்கப்படும் யதார்த்தம் நிறைந்த அழுத்தமான வசனங்கள், மறக்க முடியாத காட்சிகள் நிறைந்திருந்தது சுப்ரமணியபுரம்.

 

- மேக்கிங் என்று சொல்லப்படும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக இருந்தது. 1980 காலகட்டத்தை அப்படியே உருவாக்கி பீரியட் படங்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காகவும் ரெஃபரன்ஸாகவும் அமைந்தது. உடை, சிகை, வீடுகள், சிறைச்சாலை, திரையரங்கு, பேருந்து என அனைத்தும் அப்படியே அந்த காலகட்டத்தை நமக்குக் காட்டின.

 

- அழகர் (ஜெய்), பரமன் (சசிக்குமார்), துளசி (ஸ்வாதி), கனகு (சமுத்திரக்கனி), காசி  (கஞ்சா கருப்பு), சித்தன் (மோகன்), டும்கான் (மாரி), டோப்பா (விசித்திரன்) உள்பட  ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. இயக்குனராக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் மிகச் சிறப்பானதொரு துவக்கத்துடன் வந்தார் சசிக்குமார். தமிழ் சினிமாவின் உச்ச  இயக்குனர்களும் நடிகர்களும் சுப்ரமணியபுரத்தைப் பார்த்து, வியந்து, ரசித்து, பாராட்டினர்.

 

- ஜெய் நடித்திருந்த 'அழகர்' பாத்திரத்தில் நடிக்க அதற்கு முன்பு அணுகப்பட்டவர் சாந்தனு பாக்யராஜ். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக 'சக்கரக்கட்டி' அவரது முதல் படமாக அமைந்தது.
 

http://onelink.to/nknapp

 

- 'சுப்ரமணியபுரம்' படம் வெளியாகும் முன்பு படத்தின் ப்ரொமோஷனுக்காக 'தேநீரில் சிநேகிதம்' என்ற பாடல் வீடியோ வெளியானது. படத்திற்கும் அந்தப் பாடலுக்கும் தொடர்பே இல்லாத வகையில் மாடர்னாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் பாடலும்  ரசிக்கப்பட்டது.                         

 

- தியேட்டர்களிலும் கொண்டாடப்பட்டு, விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. அதீத வன்முறை நிறைந்திருக்கிறது, இளைஞர்களை ரௌடியிசம் பக்கம் திருப்புகிறது, பெண்கள் மீது வன்மத்தைத் தூண்டுகிறது என சில விமர்சனங்களையும் எதிர்கொண்டது. சசிக்குமாரால் சமுத்திரக்கனி கொல்லப்படும் அந்தக் காட்சி அதீத வன்முறையாக இருந்தது உண்மைதான். அதற்கு திரையரங்குகளில் எழுந்த வரவேற்பு குரல்கள் பலரைக் கவலைகொள்ளச் செய்தன.

 

- பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சுப்ரமணியபுரம் படத்தைப் பெரிதும் பாராட்டியிருந்தார். பல பேட்டிகளில், பாலா - அமீர் - சசிக்குமார் ஆகியோரின் படங்களை தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ள அனுராக், தனது 'கேங்ஸ் ஆஃப் வாசிபூர்' சிரீஸுக்கு  சுப்ரமணியபுரம் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்று கூறியுள்ளார்.            

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story

“அசிங்கப்படுத்தக்கூடிய முயற்சியில் தான் வந்தாங்க” - சமுத்திரக்கனி பகிர்வு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about adutha saattai release experience in Yaavarum Vallavare press meet

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது சமுத்திரக்கனியிடம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரொம்ப அரிதாக மரியாதை கிடைப்பது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “அப்படியெல்லாம் இல்லை. சின்ன படங்கள் எடுத்தவர் பெரிய ஆளாக இருந்திருக்க வேண்டும். அவ்வுளவுதான். படத்தில் சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. இவுங்க ஒரு அளவு கோல் வச்சிருக்காங்க. சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் 300 கோடி கலெக்ட் பண்ண படமெல்லாம் இருக்கு. 200 கோடியில் பண்ண படமெல்லாம் ஓடாமலும் இருக்கு. அப்போ எது சின்ன படம். பெரிய படம். தரம் என்பது படைப்பில் இருக்கக்கூடியது தான். அதை யார் எடுத்து சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். அளவீடுகளும் மதிப்பீடுகளும் வைக்கக் கூடியவங்க இந்த தளத்திலே இல்லாவதர்களாக இருக்காங்க. 

நான் நடித்த அடுத்த சாட்டை படம் ரிலீஸாகும் போது பயங்கர மழை. முதல் நாள் முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வர ரசிகர்கள் தடுமாறுனாங்க. பெரிய படமென்றால் குடை புடிச்சிகிட்டு வருவாங்க. இந்த படத்துக்கு பார்த்துகுவோம் என இருந்துட்டாங்க. வெள்ளி, சனி ஞாயிறு... நான் யார்கிட்ட பணம் வாங்கி படத்தை ரிலீஸ் பண்ணேனோ அவுங்க ஞாயிற்றுக்கிழமை என் ஆபிஸுக்கு வந்து நின்னுட்டாங்க. அவுங்களுக்கு கொடுக்கனும்-னா உழைச்சு சம்பாதிச்சு தான் கொடுக்கனும். அப்படி ஒரு நிலைமை எவனுக்குமே வரக் கூடாது. எனக்கு இறைவன் நடிப்பு என ஒன்னு கொடுத்ததால் தப்பிச்சேன். ஒரு எளிமையான ஒருத்தன் அப்படி மாட்டியிருந்தால் என்னவாயிருப்பான். உண்மையாகவே நம்மை அசிங்கப்படுத்தக்கூடிய முயற்சியில் தான் வந்து நின்னாங்க. எங்க போய் சொல்றது. எனக்கு தெரியும் படம் நல்ல படம், தகுதியான படம். சமூகத்துக்கு தேவையான படம். அந்த முடிவை எடுப்பவர்களுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அப்படியே குத்தி கொன்னாங்க. அடுத்த வாரம் படம் தியேட்டர்ல இல்ல. ஆனால், கடன் வாங்கி அவுங்களுக்கு நான் காசு கொடுத்தேன். இது மாதிரி அனுபவம் தான் அடுத்து இது போன்ற படைப்பு எடுக்குறதுக்கு தூண்டவே மாட்டேங்குது. மனசே வரமாட்டேங்குது” என்றார்.