‘நம்மள மனுசங்களாவே அவனுங்க நினைக்கல...’ - மீண்டும் அகதியாய் நடித்துள்ள சசிகுமார்

485

சசிகுமார் கடைசியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து ஃபீல் குட் டிராமாவாக இப்படம் அமைந்திருந்தது. மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து சசிகுமார் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியுள்ள படம் ‘ஃப்ரீடம்’(Freedom). இப்படத்தை கழுகு படம் இயக்கிய சத்யசிவா இயக்கியிருக்க நாயகியாக ஜெய் பீம் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். மேலும் மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.   

த்ரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படம் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ஜூலை 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் அகதிகளாக வரும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் எந்தளவு சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்பதை அழுத்தமான காட்சிகளுடனும் அரசியல் வசனங்களுடனும் இப்படம் பேசியிருப்பது போல் தெரிகிறது. அதற்கேற்றவாறு டிரெய்லரின் ஆரம்பத்தில், ‘எங்க பாட்டி சொல்லும், ராவணன் சீதையை கடத்துனதாலத்தான் இலங்கை சபிக்கப்பட்ட பூமி ஆயிடுச்சாம், ஒரு வேளை ராமாயணம் என்று ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நம்ம அகதிகளாக இருந்திருக்க மாட்டோம்ல’ என நாயகி பேசுகிறார். இடையில் ‘நம்மள மனுசங்களாவே அவனுங்க நினைக்கல...’ சசிகுமார் பேசுகிறார். 

பின்பு போலீஸ் சசிகுமாரை சித்ரவதை செய்யும் காட்சி அடுத்தடுத்து வருகிறது. இடையில் அகதிகளாக வரும் மக்கள் போராட்டம், சிறை, போலீஸை திருப்பி தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகிறது. இறுதியில் அவர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது. இந்த படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Lijomol Jose Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe