‘அபிநய சரஸ்வதி’, ‘கன்னடத்து பைங்கிளி’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி(87) உடல் நலக்குறைவால் இன்று(14.07.2025) காலமாகியுள்ளார். அவரது திரைப்பயணம் பின்வருமாறு...
பெங்களூருவில் பைரப்பா - ருத்ரம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சரோஜா தேவி பிறந்தார். 1955ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘மகாகவி காளிதாசா’ படம் மூலம் தனது 17வது வயதில் திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு தமிழில் ஜெமினி கணேசன் - சாவித்ரி நடிப்பில் 1956ஆம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். பின்பு தெலுங்கில் என்.டி.ராமா ராவ் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியான ‘பாண்டுரங்க மகாத்யம்’ படம் மூலம் அறிமுகானார். தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட்டில் 1961ஆம் ஆண்டு ‘ஓபரா ஹவுஸ்’ மூலம் கால் பதித்தார். இப்படியே தொடர்ந்து நடித்து பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் கலர் காலம் வரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1950ல் தொடங்கி, 1960, 1970, 1980, 1990 வரை நடிகையாகவும் அதே சமயம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நாடோடி மன்னன்’ படம் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
அப்போது தென்னிந்திய அளவில் பெண் ரசிகர்கள் மத்தியில் ஃபேஷன் ஐகானாக திகழ்ந்தார். இவர் அணியும் புடவைகள், நகை அலங்காரங்கள் பலராலும் வெகுவாக கவனிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக்டிவாக நடித்து வந்த இவர் 1967ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்துக்கு பின்பும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். கிட்டத்தட்ட 160 படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/14/383-2025-07-14-11-42-12.jpg)
பின்பு ஒரு கட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘நாதசார்வபௌமா’ படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். இதில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதுவே அவர் நடித்த கடைசி படமாக அமைந்தது. பொதுவாக இவர் பேசும் மழலையான தமிழுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு.
திரைத்துறையில் 6 தசாப்தங்களுக்கு மேலாக பயணித்து மூத்த நடிகையாக வலம் வந்த இவர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 87. இவரது மரணத் தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/14/385-2025-07-14-11-41-09.jpg)