தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம் பெரும் நடிகையான சரோஜா தேவி(87) நேற்று(14.07.2025) உடல் நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். திரைத்துறையில் 6 தசாப்தங்களாக பயணித்து வந்த சரோஜா தேவி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Advertisment

சரோஜா தேவியின் உடல் பெங்களூரு, மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் கர்நாடக ம் உதல்வர் சித்தராமையா உள்ளிட அரசியல் தலைவர்கள், விஷால், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சரோஜா தேவி தன் இறப்பிற்கு பின், தன் கண்களை தானமாக வழங்க விரும்பினார். அதன்படி பெங்களூர் நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன. 

இதையடுத்து சரோஜா தேவியின் உடல் பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுக ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்பு தஷாவரா கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. பின்பு குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இதில் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் கலந்து கொண்டார். அடுத்து சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.