பருத்திவீரன் படத்தில் செவ்வாழை கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சரவணன். ஆனால் அதற்கு முன்பு பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். அப்போது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்துள்ளார். இப்போது முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடரில் 15 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரிஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

Advertisment

திரைப்படத்தை தாண்டி அவரது சொந்த ஊரான சேலத்தில், விநாயகர் கோயிலும் ‘சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி’ என்ற படப்பிடிப்பு தளமும் கட்டி கடந்த மாதம் திறந்தார். இந்த நிலையில் இவர் மீது இவரது முதல் மனைவி சூரியஸ்ரீ புகார் கொடுத்துள்ளார். ஸ்ரீதேவி என்ற பெண்ணை சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சூழ்நிலைகளில் சரவணனுக்கு நிதியுதவி வழங்கியதாகவும் இப்போது அவர் என்னை கண்டுக்கவேயில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக சூரியஸ்ரீ ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த அவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “எனக்கு வீட்டுக்கு போறதுக்கே பயமா இருக்கு. என் உயிருக்கு பிரச்சனை இருக்கு. தினமும் சண்டை சச்சரவோடு என்னால் இருக்க முடியாது. அதனால் எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நடிகர் சரவணனும் இரண்டாவது மனைவி ஸீதேவியும் தான் பொறுப்பு. அதனால் எனக்கு பாதுகாப்பு வேணும். அதோடு ஜீவனாம்சமும் வேணும். மாதம் மாதம் வேண்டாம். ஒன் டைம் செட்டில்மெண்ட் போதும்” என்றார்.

புகார் கொடுத்த சூர்யஸ்ரீ-க்கும் சரவணனுக்கும் 2003ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரவணன், ஸ்ரீதேவி என்பவரை பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரு மணைவிகளுடனும் மவுலிவாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.