Skip to main content

சரத்குமார், விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் அப்டேட்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

sarathkumar vidharth movie update

 

ரோஷ் குமார் வழங்கும் பி.திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் படம் ‘சமரன்’. மலையாள நடிகர்கள் ஆர். நந்தா, சித்திக் மற்றும் சிங்கம்புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். வேத் சங்கர் சுகவனம் என்பவர் இசையமைக்கிறார்.

 

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி நடப்பதே இப்படத்தின் கதை. சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடி உருவாகும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.  அதனை சஸ்பென்ஸ் கலந்து உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது 

 

இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் அவரும் மனிதர் தானே” - சரத்குமார்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
sarathkumar about vadivelu in vijayakanth Memorial mee

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், “விஜயகாந்தின் சில விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் பண்பு, இதுபோன்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவருடைய புலன் விசாரணை படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. 3 நாள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் உடனே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். என்னை பார்த்ததும் விஜயகாந்திற்கு அதிர்ச்சி. ஏன் இப்படி பண்றீங்க என என்னிடம் கடிந்து கொண்டார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு, ‘இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பேரு. அதுக்கப்புறம் தான் மத்தவங்க’ என்றார். அப்படி சொன்ன பெருந்தன்மை வேறொரு எந்த கதாநாயகனுக்கும் இருக்காது. கேப்டன் பிரபாகரன் முடிந்தப்போ கூட மன்சூர் அலிகானுக்குத் தான் இந்த படத்தில் முதல் பேரு என்றார்.  

அவர் கோவம் உள்ளவர் என எல்லாருக்கும் தெரியும். கோவம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அப்படிப்பட்ட குணம் படைத்தவர் தான் அவர். கோவத்தை உடனே மறந்துவிடுவார். இவன் இப்படி பேசிட்டான், இவன ஏதாவது பண்ணனும் என்று நினைத்ததே கிடையாது. வடிவேலு வரவில்லையே என என்னிடம் கேள்வி கேட்டபோது, வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியலேயே, வந்தால் ஏதாவது திட்டுவாங்களோ என நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள், இதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்க மாட்டார். வடிவேலு நிச்சயமா அழுதிருப்பார் என்றேன். 

தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ள வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயமும் மறப்பதில்லை. அதனால் அவர் விட்டுச் சென்ற சமுதாய பணிகளை நாம் செய்வோம்” என்றார்.  

Next Story

“ஒரு கிடாயின் கருணை மனு போல் வாழ்வியல் சார்ந்த கதை” - விதார்த்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

vidhaarth about kuiko movie

 

விதார்த் மற்றும் யோகி பாபு முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள படம் ‘குய்கோ. இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார்.  இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

vidhaarth about kuiko movie

 

அப்போது விதார்த் பேசியதாவது, "இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணி தாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணி தாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், 'என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?' என 'ஃப்ரீஸர் பாக்ஸ்' கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்தபோது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. 

 

நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, 'நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதைதான். அவ்வளவு அழகான கதை. எப்படி 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறணும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரணும்" என்றார்.