தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் தவமாய் தவமிருந்தேன் படம் குறித்து, இயக்குனர் சேரன் குறித்தும் பேசிய பகுதி...

தவமாய் தவமிருந்தேன் படத்தில் நான் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். எனக்கு அது என்ன கிராமம் என்றுக்கூட தெரியாது. என்னுடைய படங்களில் முதன் முறையாக நான் நடித்த கிராமத்து கதாபாத்திரம் என்றால் அந்தப் படம்தான். நான் தற்போது கிராமத்து கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கிறேன் என்றால் அதற்கான முழு கிரெடிட்ஸும் சேரன் சாருக்கே போகும். தவமாய் தவமிருந்தேன் படம் பண்ணும்போது நான் கிராமத்து கதாபாத்திரங்களில் ஜீரோ. கிராமத்து அம்மா நெயில் பாலிஷ் போட மாட்டார்கள் என்பதுகூட தெரியாது. நான் ஏன் போடக்கூடாது என்று யோசிப்பேன். அவர்களுடைய அந்த பின்னணியில் போடமாட்டார்கள் என்பதுக்கூட புரிந்துக்கொள்ளாமல் இருந்தேன். சேரன் அதை சொல்லும்போது, என்னையா இது என்றெல்லாம் கோபம் வந்தது. கேமராவில் பதிவு செய்யும்போது ஏதோ ஒரு ஷாட்டில் அது தெரிய வரலாம். அது அந்த படத்தின் உண்மையை கெடுக்கலாம் என்பது சேரனிடம் இருதுதான் கற்றுக்கொண்டேன்.
அந்த படம் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படம், அப்போது என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறு வயது என்பதால் அவர்களை விட்டு வெளியே நீண்ட நாட்கள் தங்கி நடித்த படம் அதுதான். குழந்தைகளையெல்லாம் பிரிந்து கஷ்டப்பட வேண்டுமா என்றெல்லாம் யோசித்தேன். என்னுடைய கணவரிடம் வெளியூரிலிருந்து போன் செய்து அழுதிருக்கிறேன். என்னால் ஷூட்டிங்கிலிருந்தும் திடீரென வர முடியாது. அனைத்து காட்சியிலும் நான் இருப்பேன். அவர்களாலும் என்னை விடமுடியாது. என்னாலும் ஐந்து நாளில் வீட்டுக்கு போய்விடுவேன் என்றெல்லம் சொல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் என் இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயது என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். நான் ஷூட்டிங்கில் இருந்தபோது என் சின்ன குழந்தைக்கு கை கிழிந்து ஃபுல் ஸ்டிச் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் ஷூட்டிங்கில் இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னிடம் சொல்லவில்லை. நான் வீட்டிற்கு வந்து அதை பார்த்தபின் கதறி அழுதுவிட்டேன். தவமாய் தவமிருந்தேன் படம்தான் எனக்கு ஒரு அடிநாதம் போன்றது. அதன்பின் நான் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களில் வெற்றிபெற்றேன் என்றால் கண்டிப்பாக அதற்கு அந்தப் படம்தான் காரணம்.