sushanth dhoni

Advertisment

எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சுசாந்தின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி தனது ட்விட்டர் பதிவில் சுசாந்தின் மரணம் குறித்து பேசியுள்ளார். அதில், "கடந்த சில வருடங்களில் சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை. உண்மையில் சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் ட்வீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை. ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.