தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஊர்களில் சாலையிலும் சில இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மேலும், அதனைச் சீரமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மழைநீர் எந்தப் பகுதியிலும் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு நாளை வரை (13.11.2022) தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத்தெரிவித்திருந்தது. இதனிடையே பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் 2 அடி முதல் 3 அடிவரை தண்ணீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்கள் வீட்டின் முன் 2 அடி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா" எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சென்னை கார்ப்பரேஷன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து, "உங்கள் வீட்டின் இடத்தை அனுப்புங்கள். உடனடியாக பார்க்கிறோம்" எனத்தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்த சந்தோஷ் நாராயணன், "உங்கள் அதிகாரிகளுக்கு என் வீட்டு முகவரியை அனுப்பியுள்ளேன். சரி செய்ய ஆட்கள் அனுப்பும்போது பாதுகாப்பாக வரச்சொல்லுங்கள், இங்கு பெரிய குழிகள் மற்றும் பாம்புகள் இருந்தாலும் இருக்கும். மழைவெள்ளம் குறைந்தவுடன் இதைப் பற்றி நிரந்தர தீர்வு காணலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.