வடிவேலுவுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!

Santhosh Narayanan

‘24ம் புலிகேசி’ பட சர்ச்சை பூதாகரமானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்கு தடை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகிவரும் வடிவேலு, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் வடிவேலு நேற்று (12.09.2021) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வடிவேலு, அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த கலந்துரையாடலில், சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும், அவரது இசையில் பாடல் ஒன்றைப் பாட இருப்பதாகவும் தெரிவித்தார். வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் வருகை தந்திருந்தார். இப்படத்திற்கான பாடல் பதிவு பணிகளை சந்தோஷ் நாராயணன் விரைவில் தொடங்கவுள்ளார்.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Subscribe