
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கிசா 47’(Kissa 47) சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. பாடலின் முதல் வரிகள், ‘ஸ்ரீனிவாசா கோவிந்தா... ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா...’ என ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் படி இருப்பதாக சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர்கள் சார்பில் சேலத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகார் குறித்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானத்திடன் கேள்வி எழுப்பும் போது, சந்தானம் புகாரை மறுத்து, நான் பெருமாள் பக்தன், கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன் என விளக்கமளித்திருந்தார். இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜனசேனா கட்சியினர் ஆந்திரா திருமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் சர்ச்சையான பாடலை படத்தில் இருந்து நீக்கவும் படத்தை வெளியிட தடை செய்யவும் மனு கொடுத்து கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி படத் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும் சந்தானத்துக்கும் பாடலை படத்தில் இருந்து நீக்கவில்லை என்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்கும் நிலை ஏற்படுமென வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். மேலும் படக்குழு மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டிருந்தார். புகார் கொடுத்த அனைவரும் பெருமாளை இழிவுபடுத்துவதன் மூலம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
இப்படி தொடர்ந்து பாடலுக்கு எதிர்ப்பு வந்ததால் தற்போது படக்குழு அந்த பாடலை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாடல் நீக்கப்பட்ட புதிய பதிப்பை சென்சார் போர்டுக்கு அனுப்பி தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நாளை(15.02.2025) படம் வெளியாகும் சூழலில் தொடர் எதிர்ப்பால் படக்குழு பாடலை நீக்கியுள்ளதாக சொல்லப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.