
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள நிலையில் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது சந்தானத்திடம், செய்தியாளர் ஒருவர், சிம்பு கூப்பிட்டதுக்காக ஹீரோ கொள்கையில் இருந்து மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளீர்கள், அதே போல இப்போது துணை முதல்வர் உதயநிதி உங்களை பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் அரசியலுக்கு போக மாட்டேன் என்ற உங்களின் கொள்கையில் இருந்து உதயநிதிக்காக பிரச்சாரம் செய்ய போவீர்களா எனக் கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த சந்தானம், “அரசியலில் யார் கூப்பிட்டாலும் ஒரு விசயத்தை தெளிவா சொல்லிவிடுவேன். நீங்க உழைச்சா உங்களுக்கு சாப்பாடு, நான் உழைச்சா எனக்கு சாப்பாடு. இதை தவிற வேறு எதுவும் கிடையாது. ஆனால் நட்பு ரீதியா சில விஷயங்கள் பண்ணலாம். சில விஷயங்கள் பண்ண முடியாது. சிம்பு என்னை மீண்டும் இணைந்து நடிக்க கூப்பிட்டாலும் எனக்கு சௌகரியமான சூழலை அவர் கொடுத்துள்ளார். பழைய சந்தானம் மாதிரி பண்ண வேண்டும் என என்னை கட்டாயப்படுத்தவில்லை. எனக்கான சுதந்திரத்தை அவர் தந்துள்ளார். அதே போல உதயநிதி கூப்பிட்டாலும் எனக்கு சௌகரியமான சூழல் இருந்தால் நிச்சயம் எதாவது செய்வேன்” என்றார்.