
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கிசா 47’(Kissa 47) சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. பாடலின் முதல் வரிகள், ‘ஸ்ரீனிவாசா கோவிந்தா...ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா...’ என ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் படி இருப்பதாக வழக்கறிஞர்கள் சேலத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் குறித்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானத்திடன் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்தானம், “அது கிண்டல் கிடையாது. பாடலை பார்க்கிறவங்க, இது சரியில்லை, அது சரியில்லை என நிறைய சொல்வாங்க. அவங்க சொல்வதை எடுத்து கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறது, சென்சார் போர்டு என்ன சொல்கிறது, இதை வைத்து தான் தமிழ் சினிமாவில் எதுவாக இருந்தாலும் பண்ண முடியும். போற வரவங்க சொல்வதையெல்லாம் செய்ய முடியாது.
வருஷம் வருஷம் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போது திருப்பதிக்கு செல்வேன். இந்த முறையும் போவேன். நான் பெருமாளுடைய பக்தன். அவருடைய பாட்டு முதலில் வர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காகத்தான் பாடலை வைத்திருக்கோமே தவிர வேறு எதற்கும் இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உடையவன், அதனால் கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன். அது எல்லோருக்கும் தெரியும். அந்த பாடல் என்னுடைய மன திருப்திக்காக வைத்தது. அதுவும் சரியான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.