
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சஞ்ஜீவன்'. வினோத், நிஷாந்த், என்ஜே சத்தியா, விமல், யாசீன் & திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்த கொண்டனர்.
இந்த சந்திப்பில் இயக்குனர் மணி சேகர் பேசுகையில், "இது என்னுடைய முதல் படம். சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்ற எதார்த்தத்தை சொல்லும் படமாக 'சஞ்ஜீவன்` உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் ஸ்னூக்கர் விளையாட்டை மையமாக வைத்துள்ளோம். தென்னிந்தியாவில் முதல் ஸ்னூக்கர் படமாகவும் இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு இது முதல்படம். குறிப்பாக என்னை போன்ற பாலு மகேந்திரா சாரின் பட்டறையில் பயிற்சி பெற்றோர் பலரும் கைகோர்த்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நல்லதொரு பொழுதுபோக்கு படமாகவும், எதார்த்த நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் நல்லதொரு படமாகவும் இருக்கும்’ என்றார்.
திவ்யா துரைசாமி பேசுகையில், "செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்கு தான் முதலில் கையெழுத்திட்டேன். ஆனால், இப்போது தான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
நடிகர் சத்யா என்.ஜே. பேசுகையில், "இந்த படம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வரும் ஸ்னூக்கர் படம். ஒரு ஏரியாவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றி நகரும் கதை. நம் எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும். தயாரிப்பாளரின் மகன் நிஷாந்த் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். விஜய் சாருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்கு வந்தேன். தெறி படத்தின் வெற்றிவிழாவில், நீ நடிக்க வேண்டும் என்று தானே இந்த துறைக்கு வந்தாய்? என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். என்னை நடிகனாக அங்கீகரித்து நடிக்க போ, என்று முதலில் கூறியது விஜய் சார் தான். அவர் கூறிய வார்த்தை தான் எனக்குள் ஏதோ இருக்கிறது என்று நடிக்கத் தூண்டியது. ஆகையால், விஜய் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்" என்றார். இது போக நடிகர்கள் நிஷாந்த், வினோத், சத்யா என்.ஜே, யாசின், ஹேமா உள்ளிட்டோரும் பேசினர்.