
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆக்ஸ்ட் 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.
சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சஞ்சய் தத் அதிக பலவீனமாக, மெலிந்து, கன்னங்கள் ஒட்டிப் போய் காணப்படும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் சஞ்சய் தத்தின் ரசிகர்கள், அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சஞ்சய் தத் 'கே.ஜி.எஃப்' படத்திற்காக ஸ்டைல் செய்துகொள்ள பிரபல ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீம் சலூனுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருடன் பேசிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிடப்பட்டிருந்தது.

அதில், “இந்தப் புற்றுநோயிலிருந்து விரைவில் மீண்டு வருவேன். வீட்டை விட்டு வெளியே வருவது என்றுமே உற்சாகமாக இருக்கும். நான் 'கே.ஜி.எஃப் 2' படத்துக்காக இந்த தாடியை வளர்க்கிறேன். நாங்கள் நவம்பர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம். நாளை 'ஷம்ஷேரா' படத்துக்கான டப்பிங் உள்ளது. அது உற்சாகமாகப் போகும்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)